

கேளிக்கை வரியினை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரிக்கு மேலே, தமிழக அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி உண்டு என்ற அறிவிப்பால் தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, இன்று முதல் தமிழக திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இப்பிரச்சினைக் குறித்து திமுக-வின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் சினிமா அதல பாதாளத்தில் சென்றுவிடக்கூடாது, தமிழக அரசு தியேட்டர்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
திமுக சார்பில் சட்டமன்றத்தில் திரையரங்குகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியினை ரத்து செய்யக் கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார். இப்பிரச்சினை இன்று கூடவுள்ள சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என தெரிகிறது.