Published : 07 Jul 2017 09:07 AM
Last Updated : 07 Jul 2017 09:07 AM

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயம்: அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் அதிகரிக்கப் பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் ரங்கநாதன், ‘‘தமிழ கத்தில் உள்ள அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்? பொறியியல் கல்லூரி கட்டணத்தை அரசு உயர்த்தி யிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எந்த அடிப்படையில் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது? தனியார் கல்லூரிகளின் தரம் எப்படி மதிப்பிடப்படுகிறது? தரமற்ற கல்லூரிகளை மூட ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?’’ என துணை கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்சத்து 77 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த 2016-2017-ம் கல்வியாண்டில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 599 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அரசு நிர்ணயம் செய்வ தில்லை. மாணவர்கள்தான் கல்லூரிகளை தேர்வு செய்கின்றனர். தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வக வசதிகள் எந்தெந்த கல்லூரி களில் உள்ளன என்பதை மட்டுமே அரசு சுட்டிக்காட்டி வழிகாட்டு கிறது.

பொறியியல் கல்லூரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். கடைசியாக கடந்த 2012-13-ல் கட்டணம் உயர்த்தப் பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படாததால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரி சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதன் அடிப்படையில் கமிட்டி அமைக்கப்பட்டு தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள் ளது.

இதற்கென அமைக்கப்பட்ட கமிட்டி தனியார் கல்லூரிகளை எக்ஸ், ஒய், இசட் என மூன்று பிரிவாக பிரித்து கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே இருந்ததை விட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x