Last Updated : 13 Jul, 2017 05:20 PM

 

Published : 13 Jul 2017 05:20 PM
Last Updated : 13 Jul 2017 05:20 PM

கடலூர் மாவட்டத்தில் பெண்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் சுற்றளவுக்குள் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனவும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் 220 மீட்டர் சுற்றளவுக்குள் டாஸ்மாக் கடைகள் அமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூட வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் 500 மீட்டர் சுற்றுளவுக்குள் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு 191 டாஸ்மாக் கடைகளில். 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மாவட்டத்தில் 65 கடைகள் மட்டுமே இயங்கிவந்தது.

இதைத்தொடர்ந்து மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக புதுக் கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி மேற்கொண்டபோது, அந்தந்த பகுதி மக்களின் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து புதுக் கடைகள் திறக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விளைநிலப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் பணியை ஓசையின்றி மேற்கொண்டுவருகின்றனர் டாஸ்மாக் நிர்வாகத்தினர்.

டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமங்களில், டாஸ்மாக் ஊழியர்கள் உதவியுடன், மது பிரியர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மூலகமாக எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்ற மனுவை தயாரித்து வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளிக்கச் செய்கின்றனர். இந்த மனுவை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், கோட்டாட்சியருக்கு பரிந்துரைத்து, அதன்பேரில் ஆட்சியரின் ஒப்புதல் பெற்று கடை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதற்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று பூந்தோட்டம், ஏனாதிமேடு, அக்கரவெளி, சாவடிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

அதேநேரத்தில் ஏனாதிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கவேண்டும் என்று மதுப் பிரியர்கள் அளித்த மனுவின் பேரில், புதிய கடை அமைப்பதற்கான ஒப்புதல் கடிதம் பெற டாஸ்மாக் ஊழியர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

அப்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணிடம் கேட்டபோது, "எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று நாங்கள் முதலில் மனு கொடுக்கிறோம். அதைத் தொடர்ந்து வேண்டும் என சில குடிகாரர்கள் கொடுக்கும் மனு மீது தான் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும் போலீஸை வைத்து மிரட்டுகின்றனர். வேற பிரச்சனைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருவீங்க, அப்ப பார்த்துக்குறோம் என போலீஸாரும் மிரட்டுகின்றனர். இதுபோன்று மிரட்டியே சில இடங்களில் கடைகளை திறக்கின்றனர்"என்றார்

புதிய டாஸ்மாக் கடைக்கு ஒப்புதல் பெற வந்திருந்த டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எம்.பாண்டியனிடம் கேட்டபோது, "சில பகுதிகளில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையில், வேண்டும் எனவும் சிலர் மனு அளிக்கின்றனர். அதனை பரிசீலித்துத் தான் மாவட்ட நிர்வாகம் புதிய கடை திறக்க அனுமதிக்கிறது. நாங்கள் யாருக்கும் ஒத்துழைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை கடைகள் மூடப்பட்டால் அதற்கு மாற்றுப் பணி தேவை. அதற்காகத் தான் போராடுகிறோம். தற்போது மூடப்பட்டகடைகளுக்கு மாற்றாக மாவட்டம் முழுவதும் 13 கடைகள் திறக்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

ஏனாதிமேடு கிராமத்திற்கு புதிய டாஸ்மாக் கடை திறக்க ஒப்புதல் கடிதம் பெற விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் வந்திருந்த டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் எம்.பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x