

கதிராமங்கலம் மக்கள் மீது பழி சுமத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கதிராமங்கலம் மக்கள் மீது பழி சுமத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கதிராமங்கலம் கிராம மக்கள் எண்ணெய் கசிவினால் தங்கள் நிலங்கள் பாழ்பட்டதை கண்டிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அங்கு சென்று மக்களைச் சந்தித்திருந்தால் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் அமைதியாகப் போராடிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை நியாயப்படுத்தும் வகையில் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது தவறிழைத்த அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சியாகும்.
கதிராமங்கலத்தில் மட்டுமல்ல தஞ்சை படுகைப் பகுதியில் பல இடங்களில் மக்களிடையே பதட்ட நிலை நிலவுகிறது. உடனடியாக அமைச்சர் ஒருவரை அப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையை கண்டறிய முதல்வர் முன்வரவேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
கதிராமங்கலத்தை முற்றுகையிட்டுள்ள காவல் படையைத் திரும்பப் பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இல்லையேல் ஜூலை 10 ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களும் கதிராமங்கலம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும்'' என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.