

திருச்சியில் ஜி.கே. வாசன் நடத்தும் மாநாட்டுக்குப் பிறகு, அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸுக்கே மீண்டும் திரும்புவர் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலர்களில் ஒருவரான சு. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூருக்கு நேற்று வந்த திருநாவுக்கரசர், ராம கிருஷ்ணாபுரத்திலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் அளித்த பேட்டி: வாசன் வெளியேறியதால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக குறிப்பாக, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை தேசிய அளவில் கட்சி மற்றும் அமைச்சரவைப் பதவிகளை அனுபவித்துவிட்டு, தற்போது கட்சி ஆட்சியில் இல்லை என்பதற்காக தலைமை மீது குறை கூறுவது அபத்தமானது.
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஓராண்டு காலம் ஜி.கே. வாசன் இருந்தபோதும், கட்சி உறுப்பினர் அட்டையில் காமராஜர், மூப்பனார் படங்கள் இல்லை. ஆனால், தற்போது அந்தக் காரணத்தைக் கூறி கட்சியை விட்டு வெளியேறுவது ஏற்புடையதாக இல்லை. ஜி.கே. வாசனை பின்தொடர்ந்து வெளியேறியவர்கள், அவர் திருச்சியில் நடத்தும் மாநாட்டுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸுக்கே திரும்புவர் என்றார் திருநாவுக்கரசர்.