

எல்லைதாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் இலங்கை அரசின் சட்டம் ஏற்புடையது அல்ல என தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, ரகுபதி, காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
தமிழக மீனவர் பிரச்சினைக்கு 1974-ல் கச்சத் தீவு தாரை வார்க் கப்பட்டதே காரணம். அப்போது யார் ஆட்சியில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட பிறகு நமது கடல் எல்லை பரப்பு சுருங்கி தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிபோய் விட்டது.
இதனால் 1991-ல் ஆட்சிக்கு வந்ததும் சுதந்திர தின உரையில், கச்சத் தீவை மீட்டே தீருவேன் என ஜெயலலிதா சபதமேற்றார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இலங்கை அரசு கைப்பற்றியுள்ள 143 படகு கள், 50 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
எல்லைத்தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை என இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.