

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள லட்சுமணன், ஆரோக்கியராஜ் ஆகியோர் மென்மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற தமிழக அரசு பல உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே,வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற, வெற்றி பெற்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்தான்.
குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் 5 ஆயிரம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் முதலிடம் பெற்று இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்றிருக்கிறார். அதுபோல திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.
வெற்றி பெற்ற இந்த வீரர்களுக்கும், அவர்களது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கம், வெண்கலம் வென்ற வீரர்களுக்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்திருப்பது அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ள லட்சுமணன், ஆரோக்கியராஜ் ஆகியோர் மென்மேலும் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற தமிழக அரசு பல உதவிகளைச் செய்ய வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.