Published : 26 Jul 2017 08:15 AM
Last Updated : 26 Jul 2017 08:15 AM

பள்ளிகள், கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம் இசைக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

இளைய தலைமுறையினரிடம் தேசபக்தியை வளர்க்கும் விதத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயம் வந்தே மாதரம் பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரத்தைச் சேர்ந்த கே.வீரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் பங்கேற்றேன். அதில் ‘வந்தே மாதரம்’ பாடல் எந்த மொழியில் முதன்முதலாக எழுதப்பட்டது? என்ற கேள்விக்கு நான் வங்காளம் என பதில் அளித்தேன். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீ ஆன்சரில் சமஸ்கிருதம் என இருந்தது. இதனால் 89 மதிப்பெண் பெற்ற நான் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் ‘வந்தே மாதரம்’ வங்காள மொழியில் எழுதப்பட்டது என்றுதான் பிஎட் புத்தகங்களில் உள்ளது. எனவே எனக்கு ஒரு மதிப்பெண் வழங்கி, ஆசிரியர் பணியையும் வழங்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் ‘வந்தே மாதரம்’ எந்த மொழியில் முதன்முதலாக எழுதப்பட்டது? என்பதை அரசு தலைமை வழக்கறிஞர் விளக்க வேண்டும் என்றும், விவரம் அறிந்தவர்கள் ஆதாரங்களுடன் இந்த நீதிமன்றத்துக்கு உதவலாம் எனவும் உத்தரவிட்டார்.

அதன்படி அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார சாமி, ‘வந்தே மாதரம்’ சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வங்க மொழிப் பாடல் என பதிலளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் நீதிபதி எம்.வி.முரளிதரன் நேற்று பிறப் பித்த தீர்ப்பில் கூறியதாவது:

இந்த வழக்கில் மேற்கு வங்கத்துக்கே நேரில் சென்று பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி உயர் நீதிமன்றத்துக்கு உதவிய வழக்கறிஞர்கள் எஸ்.சுஜாதா, ஏ.பிலால், அண்ணாத்துரை ஆகி யோரை வெகுவாகப் பாராட்டு கிறேன். ‘வந்தே மாதரம்’ என்ற தேசபக்திப் பாடல் சமஸ்கிருதத் தில் எழுதப்பட்டது அல்ல. முதன்முதலாக வங்காளத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1882-ம் ஆண்டு வங்கமொழியில் எழுதப் பட்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘ஆனந்தமடம்’ என்ற புத்தகத்தில் இருந்துதான் ‘வந்தே மாதரம்’ உருவெடுத்துள்ளது. எனவே மனுதாரர் கே.வீரமணிக்கு ஒரு மதிப்பெண் வழங்கி அவருக்கு ஆசிரியர் பணியையும் 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

132 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, பன்முக மொழி கொண்ட உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. ‘வந்தே மாதரம்’ போன்ற தேசபக்தி பாடல்கள்தான் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும், மக்களை ஒருங்கிணைத்து சுதந்திர தாகத்தை ஏற்படுத்துவதற்கும் மூலகாரணம். சுதந்திரத்துக்காக உயிர்களை இழந்த நாட்டுப்பற்று மிக்கவர்களின் தியாகம் இன்றைய இளைய தலைமுறைக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும்.

இந்தியர்களிடம் தேசியம் குறைந்து வருவதால்தான் தேசிய கீதத்துக்கு அனை வரும் மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், திரையரங்கு களில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய இளைய தலைமுறையிடம் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே ‘வந்தே மாதரம்’ பாடலை பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறை பாட வேண்டும். அதுபோல அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலை களில் மாதம் ஒருமுறை ‘வந்தே மாதரம்’ பாட வேண்டும். தமிழக அரசும் இந்தப் பாடலை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அரசு இணையதளங் கள், சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தனிநபரோ, நிறு வனமோ இந்தப் பாடலை பாடவில்லை என்றால் உரிய விளக்கத்தைக்கேட்டு, அது ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் அவர் களை கட்டாயப்படுத்தக் கூடாது. நாளைய இந்தியா இன்றைய இளைய தலைமுறையிடம்தான் உள்ளது. எனவே அனைவரும் வந்தே மாதரம் பாடி தேச பக்தியை ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x