

சந்தை விலை காரணமாக வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் விற்பனை மந்தமாகியுள்ளது. கோடிக்கணக்கில் பணம் முடங்கியுள்ளதால் புதிய திட்டங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன.
நில எடுப்பு சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் துக்குத் தேவையான நிலங் களை வருவாய்த் துறை கையகப் படுத்திக் கொடுக்கிறது. முன்பெல் லாம் நில எடுப்பு தொகையை (நடை முறை விலை) சற்று உயர்த்தி, வீட்டு மனைகள், வீடுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் விற்கப் பட்டன. அதனால், ஏழைகள், நடுத்தர மக்கள் வீட்டுவசதி வாரிய வீடுகளை நியாயமான விலைக்கு வாங்க முடிந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
நில எடுப்பு விலையை சற்று உயர்த்தி வீடுகள் விற்பதற்குப் பதிலாக சந்தை விலைக்கு விற் கின்றனர். எனவே, சென்னை யில் மாதவரம், தாம்பரம் மற்றும் நாமக்கல், ஏற்காடு, ஆம்பூர் உள்ளிட்ட இடங்க ளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல், அதிகபட்சம் 22 ஆண்டுக ளுக்கு முன்புவரை கட்டப்பட்ட வீடுகள் விற்காமல் பாழாகி இருக் கின்றன.
வீடுகள் விற்காததால், கோடிக் கணக்கான மதிப்புள்ள சொத்து கள் முடங்கியிருக்கின்றன. மறு பக்கம் சந்தை விலையில், பட்டினப் பாக்கத்தில் ரூ.1.5 கோடி, இந்திரா நகரில் ரூ.1 கோடி, கே.கே.நகரில் ரூ.85 லட்சம், சோழிங்கநல்லூரில் ரூ.60 லட்சம் விலையில் வீடுகள் என அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. முன்னாள் முதல்வர் அறிவித்த திருமழிசை சாட்டிலைட் சிட்டி, பட்டினப்பாக்கம், அசோக் நகர் மரவேலை பகுதி போன்ற பல புதிய திட்டங்கள் இரண்டரை ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்.
இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சந்தை விலை காரணமாக, வீட்டுவசதி வாரிய வீடுகள், அடுக்குமாடி வீடுகள் விற்காமல், வாரியத்தில் பணப்புழக்கம் கணிச மாகக் குறைந்துவிட்டது. சந்தை விலையால், வீடுகள் ஆண்டுக் கணக்கில் விற்காமல் பாழாகி வருகின்றன. போதிய வரவேற்பு இல்லாததால், பல புதிய திட்டங்கள் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே வீட்டுவசதி வாரியத்துக்கு இடம் கொடுத்தவர்கள், தற்போது அதிக விலை கிடைப்பதால், அந்த இடங்களை திரும்பக் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த வகையில் மட்டும் 130-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. புதிய திட்டம் தொடங்காததால், பட்டினப்பாக்கம் போன்ற இடங்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன.
பல இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இப்படி பல்வேறு நெருக்கடியில் வீட்டு வசதி வாரியம் சிக்கித் தவிப்பதால், வீடுகளின் விலையை 20 சதவீதம் குறைத்து விற்கவும், புதிய அடுக்குமாடி திட்ட வீடுகள் விலையைக் குறைக்கவும் வீட்டுவசதி வாரியம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.