

கதிராமங்கலம் கிராமத்தில் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால் அங்கு மண்வளமும், நீர்வளமும் பாதிக்கப்படவில்லை. இது தொடர்பாக சிலர் சமூக வலைதளங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என ஓஎன்ஜிசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கதிராமங்கலம் பிரச்சினைக் குறித்து விளக்கம் அளிப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், அந்நிறுவனத்தின் இயக்குநர் (நிலப்பகுதி) வி.பி.மகாவர் கூறியதாவது:
ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் மட்டும் 33 எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மூலம் நாளொன்றுக்கு 900 மெட்ரிக் டன் அளவு எண்ணெயும், 33.5 லட்சம் கனமீட்டர் அளவு எரிவாயுவும் எடுத்து வருகிறது. 2006-ம் ஆண்டில் கதிராமங்கலம் கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிப்பதற்காக தோண்டப்பட்ட கிணறுதான் குத்தாலம்-35.
கடந்த மாதம் 30-ம் தேதி இந்தக் கிணற்றுடன் இணைக்கப்பட்ட குழாயில் கசிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து அதை சரி செய்ய பணியாளர்கள் விரைந்து சென்றனர். ஆனால், அக்கிராம மக்கள் சிலர் கசிவை சரி செய்ய வந்த ஊழியர்களைத் தடுத்தனர். இந்தக் கசிவு காரணமாக 2000 லிட்டர் கச்சா எண்ணெய் வெளியே பரவியது. ஒரு ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம்தான் சேதம் அடைந்தது. மேலும், காவிரிப் படுகையில் மீத்தேன், ஷேல் வாயு எடுக்கும் திட்டம் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு கிடையாது.
அதேபோல், தமிழகத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துரப்பண பணிகளை நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. ஓஎன்ஜிசி மேற்கொண்டு வரும் எண்ணெய் வள ஆராய்ச்சிப் பணிகளின்போது நீர் மாசுபடுதலோ, நிலத்தடி நீர் மட்டம் குறைவதோ கிடையாது. சுயநலம் சார்ந்த சில குழுக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவற்றை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
இவ்வாறு வி.பி.மகாவர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது காவிரி படுகை மேலாளர் டி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.