

டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலை கொல்கத்தாவில் கைது செய்த போலீஸார் இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் டாக்டர் ஆனந்தன் என்பவரின் வீட்டுக்குள் கடந்த 4-ம் தேதி 5 கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கி முனையில் பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் டாக்டர் வீட்டு வேலைக்காரப் பெண் ஹசீராபேகம் முதலில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கொல்கத்தாவில் வசிக்கும் அவரது கணவர் இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள்தான் கொள்ளையர்களாக வந்தது தெரிந்தது.
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு இம்ரான் உட்பட 5 பேரும் ரயிலில் கொல்கத்தா தப்பிச் சென்றனர். இதையறிந்த போலீஸார், ஹசீராபேகத்தை கொல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று அவர்கள் வசித்த வீடு உட்பட பல இடங்களில் சோதனை நடத்தி, துப்பாக்கி முனையில் இம்ரான் உட்பட 5 கொள்ளையர்களையும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஹசீராபேகம் உட்பட 6 பேரையும் கொல்கத்தா நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சென்னைக்கு அழைத்துவருவதற்கான அனுமதியையும் பெற்றனர்.
பின்னர் 6 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை புறப்பட்ட அவர்கள் இன்று காலை சென்னை சென்ட்ரலுக்கு வருகின்றனர்.