Last Updated : 24 Jul, 2017 08:34 PM

 

Published : 24 Jul 2017 08:34 PM
Last Updated : 24 Jul 2017 08:34 PM

கடலில் அடித்துச் செல்லப்பட்ட யானைகளை மீட்ட இலங்கை கடற்படை

இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்பகுதியில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த இரண்டு இளம் காட்டு யானைகளை அந்நாட்டு கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை திரிகோணமலை கடற்பகுதியில் 1 நாட்டிக்கல் தொலைவில் அந்நாட்டு கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூரத்தில், கருப்பு நிறத்தில் இரண்டு விலங்குகள் மிதந்து கொண்டிருப்பதைக் கண்டனர். அருகில் சென்று பார்த்தபோது, இரண்டு இளம் காட்டு யானைகள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தன.

உடனே திரிகோணைமலை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இலங்கை கடற்படையினர் யானைகள் நீந்திக் கொண்டிருக்கும் பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர், கடற்படையினர் மற்றும் வனத்துறையினரின் வழி காட்டுதலில், மூன்று ரோந்து கப்பல்கள் உதவியுடன் ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் யானைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பின்னர் ஸ்கூபா நீர் மூழ்கி வீரர்கள் யானைகளை சுற்றி கயிற்றைக் கட்டி கப்பல்கள் மூலம் கரைக்கு இழுத்து வந்து பின்னர் வனப்பகுதியில் விட்டனர்.

முன்னதாக கடந்த வாரம் இலங்கையில் உள்ள முல்லைத்தீவு கடற்பகுதியில் 8 நாட்டிக்கல் தொலைவில் கடலில் நீந்திக் கொண்டிருந்த காட்டு யானையை மீட்டது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x