

கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி நடிகர் சிவாஜிகணேசன் மறைந்தார். அவரது மறைவை சிவாஜி கணேசன் குடும்பத்தினர் ‘அன்னை இல்லம்’ நினைவு நாளாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கின்றனர். இது குறித்து சிவாஜிகணேசனின் மகனும், நடிகருமான பிரபு ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
நடிகர் திலகத்தின் மீது எல்லோரும் அன்பு வைத் திருப்பதால்தான் நாங்கள் நலமுடன் இருக்கிறோம்.இந்த நாளில் அரசு சார்பில் விரைவில் நடிகர் திலகத்துக்கு மணி மண்டபம் திறக்கப்படும் என்ற செய்தியும் பெருமைப்பட வைத்துள்ளது. மணி மண்டபத்தை கட்ட ஆர்வமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அவரது எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செயல்பட்டுவரும் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர் திலகத்துக்கு சிலை எடுத்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் அன்னை இல்லம் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு பிரபு தெரிவித்தார்.