

தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்திற்குள் மண்ணெண் ணெய் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் கடந்த 13-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வெளியா னது. ஆனால், வீசப்பட்டது மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில் என முதல்வர் கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.
இதைத் தொடர்ந்து மண்ணெண் ணெய் குண்டுகளை வீசியவர் களைக் கைது செய்ய தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 6 தனிப்படை அமைக் கப்பட்டது. மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியதாக கண்ணகி நகர் அருண் (18), தேனாம்பேட்டை வினோத் என்ற கருக்கா வினோத் (32), அவர்களது கூட்டாளிகள் கண்ணகி நகர் மணி என்ற டியோ மணி (23), அதே பகுதி மணி என்ற மணிகண்டன் (20), எழில் நகர் அய்யப்பன் (21), ராயபுரம் கார்த்திக் (32) ஆகிய 6 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து இணை ஆணையர் அன்பு கூறுகையில், “கருக்கா வினோத், டியோ மணி இருவரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். குறிப்பாக டியோ மணியை தேனாம் பேட்டை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். அவர்கள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும், போலீஸார் தங்களை பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காக டியோ மணி, கருக்கா வினோத் இருவரும் தங்களது கூட்டாளிகளுடன் சென்று காவல் நிலைய வளாகத்தில் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசியுள்ளனர்.
கடந்த 2015-ல் தியாகராய நகர் சவுத்போக் சாலையில் உள்ள மதுபானக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் மீது ஏற்கெனவே புகார் உள்ளது” என்றார்.