

போரூர் ஏரி நீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்கும் திட்டத்தின் 48 மணி நேர சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.
வறட்சியால் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்ட நிலையில், மாநகரின் கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்ய மாற்று நீர் ஆதாரங்களை தேடும் பணியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான இயந்திரம் குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்டு, அதை நிறுவும் பணி நிறைவுபெற்ற நிலையில், 48 மணி நேர சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.
அது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
போரூர் ஏரியில் உள்ள நீரை அதே இடத்தில் சுத்திகரித்து, குடிநீராக்கி தினமும் 4 மில்லியன் லிட்டர் குடிநீர் வீதம், 3 மாதங்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயந்திரங்களை நிறுவும் பணி நிறைவுபெற்ற நிலையில், 48 மணி நேர சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியுள்ளது. அதன் பின்னர் குடிநீர் விநியோகம் தொடங்கும். இப்பகுதியில் எடுக்கப்படும் குடிநீர், போரூர் நீரேற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து, வீராணம் குடிநீர் குழாயில் செலுத்தி, வளசரவாக்கம், ஆலந்தூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.