Last Updated : 08 Jul, 2017 12:24 PM

 

Published : 08 Jul 2017 12:24 PM
Last Updated : 08 Jul 2017 12:24 PM

எல்லை தாண்டி மீன் பிடித்தால் அபராதத்துடன் சிறை: இலங்கை மசோதாவுக்கு மீனவர்கள் வரவேற்பும் எதிர்ப்பும்

எல்லையைக் கடந்து வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கு தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் வரவேற்பும், விசைப்படகு மீனவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009-ம் ஆண்டு கடலுக்குச் சென்றனர்.

அப்போது தமிழக விசைப்படகு மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து தங்களின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் டெல்லி, கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் மத்திய-மாநில அமைச்சகர்கள், மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.

அப்போது இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக் கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் தேவை எனவும், இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்கிறோம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடல் பகுதியில் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே மீன்பிடி முறைகளை மூன்று ஆண்டுகளில் மாற்றிக் கொள்கிறோம் என தமிழக விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியதால் 2014-ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்ட முடியவில்லை.

தமிழக விசைப்படகு மீனவர்கள் 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இலங்கையின் வட மாகாண கடல் பகுதிகளில் மீன்பிடிக் கும்போது இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திவிட்டுச் செல்வது, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிச் செல்வது, மீனவப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும், கடலின் சூழலியலையும் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங் களை நடத்தினர்.

இதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழகம், புதுச்சேரி மீனவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 கோடி (இலங்கை மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வரவேற்பு

இது குறித்து மீனவப் பேச்சுவார்த்தைகளில் தமிழக நாட்டுப் படகு மீனவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட பாம்பனைச் சேர்ந்த அருள் கூறியதாவது:

பாரம்பரிய மீன்பிடி முறைகளை மட்டுமே பின்பற்றி வந்த தமிழக மீனவர்களுக்கு இந்தியா-நார்வே மீன்பிடி திட்டத்தின் கீழ் நவீன மீன்பிடி முறை 1964-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனால் தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி உள்ளிட்ட வலைகளையும், இழுவைப் படகுகள், டைனமைட் மீன்பிடி முறைகளில் தொடர்ந்து 50 ஆண்டுகள் பயன்படுத்தியதால் தமிழக கடற்கரைகளின் மீன் வளமும், மீன் குஞ்சுகள் வளர்வதற்கான இயற்கை வளமும், கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடல் வளம் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி, இழுவைப் படகுகள் ஆகிய வற்றைப் பயன்படுத்த மத்திய-மாநில அரசுகள் தடை விதித்தன.

ஆனாலும் தமிழக விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பின்பற்றி வருவதால் தமிழக நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவே இல்லை.

இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து அந்நாட்டில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தும் தமிழக விசைப்படகு மீனவர்களை தடுக்க வலியுறுத்தி இலங்கையில் உள்ள தமிழ் மீனவ உறவுகள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்துக்கு இந்த புதிய சட்டத்தின் வாயிலாக வெற்றி கிடைத்துள்ளது. இதை தமிழக நாட்டுப்படகு மீனவர்கள் வரவேற்கிறோம் என்றார்.

எதிர்ப்பு

ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி ஆம்ஸ் ட்ராங் பெர்னாண்டோ கூறியதாவது: பாம்பனில் நடைபெற்ற கடல் தாமரைப் போராட்டத்தில் பங்கேற்ற சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் பிரதமர் வேட்பாளராக பங்கேற்று பேசிய நரேந்திர மோடி ஆகியோர் மத்தியில் மீன்வளத் துறை அமைச் சகம் நிறுவப்படும், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தும் அவற்றை நிறைவேற்றத் தவறி விட்டனர்.

குஜராத் மீனவர்கள் மீது அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, மத்திய அரசு அவர்கள் மீது காட்டிய அக்கறையை, தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது காட்டாமல் ஒருதலைப்பட்சமாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் நடந்து கொ ண்டனர்.

மத்திய அரசு தமிழக மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி முற்றிலும் மாறான நிலைப்பாட்டை மேற்கொண்டு வந்ததால் தான் இந்த புதிய சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவே ற்றப்பட்டுள்ளது.

இனிமேல் இலங்கை கடற்படை யினரால் சிறைப்படும் தமிழக மீனவர் களுக்காக யார் அபராதம் கட்டப் போகிறார்கள்?. இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்றால் இதற்கான வழக்குகளை இலங்கை நீதிமன்றத்தில் நடத்தப்போவது யார்?. மத்திய அரசா அல்லது மாநில அரசா என்ற கேள்விகள் மட்டுமே தற்போது விசைப்படகு மீனவர்களிடம் மிஞ்சி நிற்கின்றன.

இனிமேலாவது பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x