Published : 10 Jul 2017 11:43 AM
Last Updated : 10 Jul 2017 11:43 AM

டாஸ்மாக் இல்லாத நகராட்சியானது விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் ஒட்டு மொத்தமாக அகற்றப்பட்டு மது விற்பனை இல்லா விழுப்புரம் நகரம் உருவாகியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 287 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. எதிர்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழகம் முழுவதும் மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டன. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 41 கடைகள் மூடப்பட்டன.

நாடெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள்ளும், மாநில நெடுஞ்சாலைகளில் 220 மீட்டருக்குள்ளும் மதுபானக் கடைகள், பார்கள் ஏப்ரல் 1- ம் தேதி முதல் இயங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 145 டாஸ்மாக் கடைகளும், 6 தனியார் மதுபான குடிப்பகங்களும் மூடப்பட்டன. விழுப்புரம் நகரில் இயங்கி வந்த 19 டாஸ்மாக் கடைகளில் 16 கடைகள் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மூடப்பட்டன. மீதமுள்ள 3 கடைகள் விழுப்புரம் கே.கே. ரோட்டிலும், சாலா மேட்டிலும், கீழ் பெரும்பாக்கத்திலும் இயங்கி வந்தன.

பொதுமக்களின் போராட்டத்தால் கே கே ரோடு, கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளில் ஒன்று சாலாமேட்டில் புதிதாக திறக்கப்பட்டது. இதனால் சாலாமேடு பகுதியில் அருகருகே இரண்டு கடைகள் இயங்கி வந்தன. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம், மற்றொரு கடையை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மூடியது.

இதையடுத்து விழுப்புரம் நகராட்சியில் தற்போது டாஸ்மாக் கடைகள் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர். நகராட்சிக்குள் கடைகள் அடைக்கப்பட்டாலும், தற்போது விழுப்புரம் நகராட்சியை ஒட்டிய ஜானகிபுரம் கிராம எல்லைக் குட்பட்ட பகுதியில் ஒரே கட்டிடத்திற்குள் இரு கடைகள் திறக்கப்பட்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 130 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x