

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வருமானவரித் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிக அளவில் நடந்ததாகவும், அமைச்சர்கள் சிலரே இதில் நேரடியாக ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள அவருக்குச் சொந்தமான கல்லூரி, கல்குவாரி என பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசா ரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு வருமானவரித் துறை சம்மன் அனுப்பியது. அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமானவரித் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.