கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 729 கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு
Updated on
1 min read

கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்து வரி செலுத்தாத 729 கடை களுக்கு சீல் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்தும் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு தொடர்ந்த வழக்கில், “1996-ம் ஆண்டு முதல் தற்போது வரை எங்களது கடைகளுக்கு சொத்து வரியை நிர்ணயம் செய்து அதை செலுத்தும்படி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. எங்களுக்கு முன்பாக இந்தக் கடைகளை வேறு சிலர் நிர்வகித்து வந்தனர். எனவே அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’’ என கோரியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தார். மேலும் கடந்த 19 ஆண்டுகளாக சொத்து வரியை உயர்த்தாததால் மாநகராட்சிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். கோயம்பேடு மார்க்கெட்டில் சொத்து வரி செலுத்தாமல் உள்ள கடைகளை சீல் வைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 1998 முதல் சொத்து வரியை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தாததால் மாநகராட்சிக்கு ரூ.1841.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் பி.வி.செல்வகுமார், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரத்து 325 கடைகள் உள்ளன. அதில், 1,596 கடைகளின் உரிமையாளர்கள் நிலுவையாக இருந்த சொத்து வரியை செலுத்திவிட்டனர். எஞ்சிய 729 கடைகளின் உரிமையாளர்கள் மட்டும் இன்னும் சொத்து வரியை செலுத்தவில்லை. அவர்களின் கடைகளை சீல் வைக்கச் சென்றால் அதிகாரிகளை மிரட்டுகின்றனர். அவர்களிடமிருந்து சொத்து வரியாக ரூ.2.48 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி என்.கிருபாகரன், ‘‘அரசியல் கட்சியினர் தங்களின் சுயலாபத்துக்காக கடந்த 1998 முதல் மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்தாமல் இருந்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் மாநகர போலீஸ் ஆணையரையும் எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். வரி செலுத்த மறுத்து வரும் 729 கடைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை மாநகராட்சி வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in