3 நாட்களாக வங்கக் கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக நீடித்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு மாறாமல் வங்கக் கடல் பகுதியில் இருந்து சற்று மேற்கு நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக கடலோர மாவட் டங்களில் கன மழை பெய்தது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறும்போது, ‘‘வங்கக் கடலில் கடந்த 3 நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இது தற்போது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழையும், தென் தமிழகத்தில் கன மழையும் பெய்யும்'' என்றார்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு: தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் அதிகபட்ச மாக 6 செ.மீ. மழையும், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 5 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளம் உள்ளிட்ட இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
