

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளருக்கு தெரிவிக்கும் புதிய இயந்திரம், தமிழகத்தில் மத்திய சென்னை, குஜராத்தில் காந்திநகர் உள்பட நாடு முழுவதும் 7 தொகுதிகளில் மட்டும் பயன்படுத்தப்பட உள்ளது. இவற்றை இயக்குவதற்கான பயிற்சி பெறுவதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி விரைந்துள்ளனர்.
தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு வெளியே வரும் வாக்காளர்களில் சிலருக்கு, தாங்கள் விரும்பிய நபருக்குதான் ஓட்டு போட்டோமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்தில் ஓட்டு பதிவாகிறது என்ற புகார்களும் ஒருசில இடங்களில் எழுவதுண்டு.
புதிய இயந்திரம் வடிவமைப்பு
இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்கவும், தேர்தல் வழக்குகளை கருத்தில் கொண்டும் புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
இதற்காக ‘விவபேட்’ என்ற இயந்திரத்தை தனியார் நிறுவனத்தின் துணையுடன் வடிவமைத்துள்ளது. இந்த இயந்திரத்தில் ஒருவர் ஓட்டு போடும்போது, எந்த சின்னத்தில் அந்த ஓட்டு பதிவாகிறது என்பதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
நாகாலாந்தில் கடந்த ஆண்டு நடந்த நோக்சென் இடைத்தேர்தலில் இந்த புதிய இயந்திரம் பயன்படுத்தப்பட்டு திருப்திகரமாக செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இந்த இயந்திரத்தை அறிமுகப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. தமிழகத்தில் மத்திய சென்னையில் மட்டும் இது பயன்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக தேர்தல் துறையினர் ‘தி இந்து’விடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
மத்திய சென்னை
மத்திய சென்னை (தமிழகம்), பாட்னா சாஹிப் (பிஹார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), காந்திநகர் (குஜ ராத்), பெங்களூர் தெற்கு (கர்நாடகம்), லக்னோ (உத்தரப் பிரதேசம்), ஜாதவ்பூர் (மேற்கு வங்கம்) ஆகிய 7 தொகுதிகளில் இந்த புதிய முறை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.
இதற்கான ‘விவபேட்’ இயந்திரங்கள் சென்னை புளியந் தோப்பில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்துவதற்கு நமது ஊழியர்களுக்கு அனு பவம் இல்லை. அதனால் மாஸ்டர் டிரெயினர் எனப்படும் 5 அதிகாரிகளை டெல்லிக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ளோம்.
அவர்களுக்கு செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 1) பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் 5 பேரும் சென்னை திரும்பியதும் மத்திய சென்னை தொகுதியில் பணியாற்றவுள்ள மற்ற தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப் பார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.