

கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விளாத்திக்குளம் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவிசங்கர்.
இந்நிலையில், கடந்த 2003-ல் ஆயிரத்து 500 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்பு வழக்கில் அவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளும் கைதாகினர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிசங்கரை வேறொரு வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றபோது அவர் தப்பித்து தலைமறைவானார். இதையடுத்து, ரவிசங்கர் மீதான வழக்கு மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு கூட்டாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வெகுநாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ரவிசங்கர், மோசடி வழக்கு ஒன்றில் போலீஸில் சிக்கினார். ஏற்கெனவே அவர் மீது நிலுவையில் இருந்த போதை பொருள் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் தாமல்கண்ணா ஆஜரான, இவ் வழக்கை விசாரித்த நீதிபதி கே.அய்யப்பன், குற்றம் சாட்டப்பட்ட ரவிசங்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.