

கதிராமங்கலத்தில் மக்கள் மீது தடியடி நடத்திய போலீஸாருக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓஎன்ஜிசியின் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கையால் கதிராமங்கலம் கிராமம் பதற்ற பூமியாக மாறியது. ஓஎன்ஜிசி பைப் லைனில் 2 இடங்களில் உடைப்போ அல்லது வெடிப்போ ஏற்பட்டு அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. இதைக் கேள்விப்பட்டு மக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர்.
மீத்தேன் திட்ட வேலைகளை ஓஎன்ஜிசி மவுனமாக செய்து வருவதாக கூறி மக்கள் போராடி வரும் நிலையில், குழாயிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறியது அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அங்கிருந்த போலீஸார், மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மக்களோ தாங்கள் அமைதியாகவே அங்கு நின்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளனர். உடனே, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டிய காவல்துறையே அடக்குமுறையை கையில் எடுத்திருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.