

தமிழர்களின் அறத்தின் அடையாளமாக நிலைத்து நிற்கும் சுமைதாங்கி கற்கள் சிவகங்கை மாவட்டத்தில் சாலையெங்கும் அதிகமாகத் தென்படுவது தொண்டாற்றல் நிறைந்தவர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதை எடுத்துக்காட்டுகிறது.
சுமைதாங்கி கல் என்பது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும். சுமைகளை சுமந்து செல்வோர் அதனை பிறர் துணையின்றி எளிதாக இறக்கி மீண்டும் தூக்கிக்கொள்வதற்காக கட்டப்பட்ட அமைப்பு. முந்தைய காலங்களில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல வாய்ப்புள்ளவர் மட்டும் விலங்குகளின் துணையோடு வாகனங்களை பயன்படுத்தினர். மற்றவர்கள் தோளிலும், தலையிலும் சுமை களுடன் சுமந்து சென்றனர். சுமையுடன் சென்றவர்களுக்கு உதவிடும் வகையில் அன்றைய ஆட்சியாளர்களும், தொண்டாற்ற நினைத்தவர்களும் நீர்நிலைகள் உள்ள சாலையோர மரத்தடிகளில் சுமைதாங்கி கற்களை நட்டு மகிழ்ந்தனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளரும், தஞ்சை தொல்லியல் கழக உறுப்பினருமான உ.விஜயராமு கள ஆய்வு செய்ததில் கூறியது: ரோமின் மத்தியதரை கடல்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளரால் கண்டு பிடிக்கப்பட்டதே உலகின் மிகப் பழமையான சுமைதாங்கி கல்லாக (10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு) கருதப்படுகிறது.
பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் விவசாயப் பயன்பாட்டிற்காக நீர்நிலைகளை உருவாக்கினர். பயணத்திற்காக சாலை வசதி செய்தும் சாலையோரங்களில் மரங்கள் நட்டனர். பயணிகள் தங்கிச் செல்ல சத்திரங்களை கட்டினர். அசோக மன்னர் சாலையெங்கும் மரங்களை நட்டு வைத்தார், ராணி மங்கம்மாளும் மரங்கள் நட்டு சத்திரங்கள் பல கட்டிக் கொடுத்தார். இவ்வாறே சுமையுடன் செல்லும் பயணியின் சிரமத்தை போக்க சுமைதாங்கி கற்களை அமைத்துக்கொடுத்தனர்.
தன்னை அடையாளப்படுத்த அக்கற்களில் பெயர்களை பதித்து வைத்தனர். மனிதருக்கு மட்டுமின்றி தண்ணீர் குடித்த மாடுகள் தன் சுனைப்பை தவிர்க்கவும் இக்கல் பயன்பட்டுள்ளது. இவை ஆவுரோஞ்சி கல் எனப்பட்டது. இறப்பு எய்திய கர்ப்பிணிப் பெண்களின் நினைவாகவும் சுமைதாங்கி கற்களை நட்டு வைத்தனர். இன்றளவும் பலர் இக்கற்களுக்கு மாலையிட்டு வழிபாடு செய்கின்றனர்.
காலமாற்றத்தால் காணாமல் போன அடையாளங்களில் சுமை தாங்கி கற்களும் ஒன்றாகி விட்டது. பழமைக்கு சாட்சியாகத் திகழும் சுமைதாங்கி கற்களை பாதுகாப்பது நமது கடமை என்றார்.