Published : 04 Jul 2017 08:17 AM
Last Updated : 04 Jul 2017 08:17 AM

சிபிசிஎல் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு: அதிகாரிகள், போலீஸ் மிரட்டுவதாக டிஜிபியிடம் மீனவ மக்கள் புகார்

கச்சா எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் சிபிசிஎல் அதிகாரிகளும், போலீஸாரும் மிரட்டுவதாக டிஜிபி அலுவலகத்தில் திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவ மக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

சென்னை துறைமுகத்துக்கு கப்பல்களில் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் மூலம் மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய்களுக்கு பதிலாக, புதிய வழித்தடத்தில் 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணியை மணலி சிபிசிஎல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த குழாய்கள் செல்லும் வழித்தடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றுக் கூறி, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர் குப்பம் பகுதி வழியாகவும் குழாய்கள் பதிக்க சிபிசிஎல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் அப்பகுதி மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திருவொற்றியூர் குப்பம் பகுதி மக்கள் கூட்டாகச் சேர்ந்து, நேற்று காலை டிஜிபி டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் குழாய் பதிப்பதற்காக நாங்கள் வசித்து வரும் வீட்டை காலி செய்யச்சொல்லி சிபிசிஎல் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். வீட்டுக்கு ரூ.3 ஆயிரம் பணம் கொடுக்கவும் முயற்சி செய்தனர். இப்போது போலீஸார் மூலம் மிரட்டப்படுகிறோம். எங்களது வீட்டை காலி செய்ய நாங்கள் சம் மதம் தெரிவித்ததாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கவும் முயற்சி செய்து வருகின்றனர்.

இதனால் நாங்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் என்று கூறப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட டிஜிபி, ‘ஓரிரு நாட்களில் உங்கள் பகுதிக்கு காவல் துறை உயர் அதிகாரி ஒருவரை அனுப்பி விசாரணை நடத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x