

கோவை மாவட்டத்தில் வனவிலங்கு உயிரிழப்புகள் அதிகம் நடக்கும் பகுதியாக மட்டுமே சிறுமுகை வனப்பகுதி அறியப்பட்டுள்ளது. வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு, விவசாய ஆக்கிரமிப்பு என பல காரணங்கள் அதற்கு உள்ளன. ஆனால் அதையெல்லாம் மீறி, வறட்சியிலும் நீர்வளம் செழிக்கும் வனப்பகுதியை வனத்துறையினர் உருவாக்கி உள்ளனர். அதுவே அப்பகுதியின் உயிர்ச்சூழலை தாங்கிப் பிடித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையும், நீலகிரி கிழக்குச் சரிவு மலைத் தொடரும் இணையும் இடம் சிறுமுகை வனப்பகுதி. அதன் தொடர்ச்சியாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதியும், சத்தியமங்கலம் வனப்பகுதியும் இருப்பதால் இங்கு யானை, புலி, காட்டெருமை, சிறுத்தை, மான் போன்ற அரிய விலங்குகள் அதிகளவில் உள்ளன.
மிக முக்கியமான நீராதாரமான பவானிசாகர் நீர்பிடிப்புப் பகுதியில் தொடர்ந்து வறண்ட சூழலே நிலவுவதால், கடந்த சில ஆண்டுகளாகவே விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே யானை உள்ளிட்ட விலங்குகளின் இறப்புகள் அதிகரித்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரகங்களிலும் இந்த பிரச்சினை உள்ளது. ஆனால் சிறுமுகையில் சற்று அதிகமாகவே உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, சிறுமுகை வனப்பகுதியின் மேற்குப்பகுதியில் 2011-ல் தீவனக்காடு திட்டம் தொடங்கப் பட்டது. ஆனால் வனவிலங்குகளின் தொடர் ஊடுருவலால் தீவனக்காடு திட்டம் தோல்வியடைந்தது. அதற்காக தொடங்கிய வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அத்திட்டத்துக்கு மறுவடிவாக்கம் கொடுக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். வனவிலங்குகள் இங்கு அதிகம் இருப்பதால், அவற்றுக்கான தண்ணீர் வசதியை ஆண்டு முழுவதும் ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தனர்.
தீவனக்காடு திட்டம் கைவிடப்பட்ட இடத்தின் அருகிலேயே வில்வமரக் குட்டை என்ற இடத்தில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் நீர்நிலை உருவாக்கப்பட்டது. நீலகிரி மலைத்தொடரில் உருவாகி அரவேணு, கீழ்தட்டப்பள்ளம் வழியாக வரும் குணுக்குமடுவு ஆற்றில் இருந்து நீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. கட்டமொக்கை மலையைச் சுற்றி சுமார் 6 கி.மீட்டர் தூரத்துக்கு ஏற்கெனவே இருந்த நீர்வழிப் பாதையைப் பயன்படுத்தி குழாய் அமைத்து நீர் எடுத்து வரப்பட்டது.
வில்வமரக் குட்டையிலும் நீர் தேங்கத் தொடங்கியது. நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கோடையிலும் குறையாமல் வனவிலங்குகளுக்கு வறட்சியைப் போக்கியுள்ளது. தற்போது பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாதபோதும், இதில் வற்றாத நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரியவகை விலங்குகள் கூட இங்கு அடிக்கடி வந்து செல்வதாக ஆச்சரியப்படுகின்றனர் வனத்துறையினர்.
தினமும் 10000 லி. தண்ணீர்
இது குறித்து வனச்சரகர் மனோகரன் கூறும்போது, ‘முன்னர் இருந்த திட்டத்தை மறுவடிவமைத்து பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறோம். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10,000 லிட்டர் தண்ணீர் இந்த குட்டைக்கு வருகிறது. இதை நம்பி ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்கின்றன. வில்வமரக்குட்டை நீர்நிலையால், சிறுமுகை மேற்கு வனப்பகுதி முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடில்லாத, வளமான பகுதியாக உள்ளது. அதிகளவில் விலங்குகள் வருவதால், நோய் தடுப்பு உப்புக்கட்டிகள் இங்குதான் வைக்கப்படுகின்றன’ என்றார்.
வனத்துறை ஊழியர்களிடம் கேட்டபோது, ‘வில்வமரக் குட்டை முன்மாதிரித் திட்டமாக கருதப்படுகிறது. பழங்காலத்தில் மக்கள் தேவைக்காக காடு, மலை கடந்து குடிநீர் கொண்டு வந்ததுபோல, வனவிலங்குகளுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் நீர் கொண்டு வரும் குழாய்களை யானைகள் அடிக்கடி சேதப்படுத்திவிடுகின்றன. எனவே குணுக்குமடுவு ஆற்றில் தடுப்பணையை சீரமைத்து, இரும்புக் குழாய்களை நிலத்தில் பதித்து அதன் மூலம் நீர் கொண்டு வந்தால், இத்திட்டம் நூற்றாண்டுகள் கடந்தும் நீடிக்கும்’ என்றனர்.