உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு
Updated on
1 min read

மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ''மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வுப் பட்டியலுக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் முடிக்கப்பட்டிருந்தன. கலந்தாய்வை நடத்தவும் தயார் நிலையில் இருந்தோம். ஆனால் இன்று 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாங்கள் பிறப்பித்த அரசாணை மாணவர்களின் நலனுக்காக, அரசு எடுத்த கொள்கை முடிவாகும். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவை அடுத்து, சட்ட நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்.

நகல் வந்தவுடன் உயர் நீதிமன்றத்திலேயே கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வில் முறையிடப்படும். அரசு எடுக்கப்படும் முடிவு எல்லோரும் பயனடையும் வகையில் இருக்கும். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

நீட் தேர்வு குறித்து தமிழக அரசு தொடர்ந்து மெளனம் காக்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''பத்திரிகையாளர்களே கள நிலவரத்தைப் புரிந்துகொள்ளாமல் பேசுவது வேதனையாக உள்ளது. நாங்கள் மாநில அரசின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம்.

நீட் தேர்வு குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணாக்கரின் மருத்துவக் கனவை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும்'' என்று தெரிவித்தார் விஜயபாஸ்கர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in