

பணியின்போது உயிரிழக்கும் தீயணைப்பு வீரர்களுக்கு வழங் கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் எழுந்து, கொடுங்கையூர் தீ விபத்து தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:
கடந்த 15-ம் தேதி கொடுங்கையூரில் மூடியிருந்த பேக்கரியில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். பேக்கரியில் இருந்து புகை வருவதைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் ஏகராஜ், லட்சுமணன், ராஜதுரை, ஜெயபாலன் ஆகியோர் கடையின் ஷட்டரை இழுக்க முயற்சி செய்தனர்.
அப்போது கடையில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து ஷட்டர் துண்டுதுண்டாக உடைந்து தூக்கி எறியப்பட்டது. மிகப்பெரிய தீப்பிழம்பு உருவாகி தீயணைப்பு வீரர்கள், பணியில் இருந்த காவல் துறையினர், பொதுமக்களை தாக்கியது. பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலையில் பலத்த காயமும் உடலில் தீக்காயங்களும் ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர் ஏகராஜ் உயிரிழந்தார். அவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏகராஜ் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம், கருணைத் தொகை ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்த தீயணைப்பு வீரர்கள் ராஜதுரை, லட்சுமணன் ஆகியோர் அவரது உறவினர்கள் வேண்டுகோளின்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறை மானியக் கோரிக்கையின்போது நான் அறிவித்த எதிர்பாரா மருத் துவ நலநிதி மூலம் இவர்க ளுக்கான மருத்துவச் செலவு மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கருணைத் தொகை உயர்வு
பணியின்போது வீர மரணம் அடையும் தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை காவல் துறையினருக்கு இணையாக ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், நிரந்தர ஊனம் அடைவோருக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், கடும் தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 20 சதவீதத்துக்கும் குறைவாக தீக்காயம் அடைந்தவர்களுக்கு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் இந்த நிதியாண்டில் இருந்து உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் காயம் அடைந்த 48 பேருக்கு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.