

மதுரையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக வளாகத்தில் குப்பை போல பெட்டி, பெட்டியாக மருந்துகள் பாதுகாப்பில்லாமல் வீசப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்குச் சொந்தமான பண்டகசாலைகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்குச் சொந்தமான மருந்துகள் பண்டகசாலை செயல்படுகிறது. இங்கிருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மருந்து, மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகத்துக்குச் சொந்தமான மருந்துகள் பண்டகசாலை வளாகத்தில் பெட்டி, பெட்டியாக மருந்துகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் உரிய நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படாததால் காலாவதியாகி பெட்டி, பெட்டியாக குப்பை யில் வீசப்படுகிறதா? அல்லது தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்ட மருந்துகள், பயன்பாடில்லாமல் வைப்பதற்கு இடமில்லாமல் இப்படி குப்பையில் வீசப்படுகிறதா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு மருத் துவ சேவைக் கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: அரசால் கொள்முதல் செய்யப்படும் மருந்துகள், மருத்துவ சேவைக் கழக பண்டகசாலையில் முறையாக பாதுகாத்து அரசு மருத் துவமனைகளுக்கு தேவைப் படும்போது அனுப்பி வைக்கப் படும். இப்படி அனுப்பி வைக்கும் போது, அந்த மருந்துகள் பயன் பாட்டில் சந்தேகம் அல்லது பக்க விளைவுகள் ஏதும் ஏற்பட் டால், அவை உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பாமல் நிறுத்தப்படும்.
அதுபோல, மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த மருந்துகள் உடனடியாக பயன்பாட்டுக்கு நிராகரிக்கப்படும். இப்படி நிராகரிக்கப்படும் மருந்து கள், மருத்துவ சேவைக் கழக பண்டகசாலையிலேயே வைக்கப் படும். அதன்பின் சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் அந்த மருந்துகளை திரும்ப பெற்றுக் கொள்வர். இது வழக்கமான நடைமுறைதான்.
பண்டகசாலையில் தற்போது மருந்துகளை வைப்பதற்கே போதிய இடவசதியில்லை. மேலும், நிராகரிக்கப்பட்ட மருந்துகள், மருத்துவமனைகளுக்கு அனுப்பு வதற்கு வைக்கப்பட்டுள்ள மருந்து களுடன் கலந்து, மீண்டும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விட வாய்ப்புள்ளது. அதனால், இந்த மருந்துகளை வைக்க இடமில்லாமல் வளாகத்தில் போட்டு விடுவோம். மருந்து நிறுவனங்கள் அவற்றை எடுத்துச் செல்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முற்றிலும் அழிக்க வேண்டும்
நிராகரிக்கப்பட்ட மருந்தாக இருந்தாலும், காலாவதியான மருந்தாக இருப்பினும் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது அல்லது அழிப்பது மருத்துவ சேவைக்கழகத்தின் பொறுப்பாகும். இடவசதியில்லை என்ற காரணத்தைக் கூறி மருந்துகளை பெட்டி, பெட்டியாக திறந்தவெளியில் குப்பைபோல போட்டு வைத்திருப்பது சரியல்ல. இந்த மருந்துகளை யாரேனும் வெளிநபர்கள் எடுத்துச் சென்று சட்டவிரோதமாக மறுசுழற்சிக்கு விற்கும் அபாயமும் உள்ளது. இந்த மருந்துகளை மருத்துவ நிறுவனங்களுக்கு அனுப்பும் வரை, அவற்றை பாதுகாப்பாக வைக்க தனியாக குடோன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.