

மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தினால், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணை அதிகாரி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துரை தயாநிதி மீது கீழவளவு காவல் நிலையத்தில் உள்ள கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதிக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியது. துரை தயாநிதி வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்புவதையும் 3 நாட்களுக்கு முன்பே மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அப்போது நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை தளர்த் தக் கோரி துரை தயாநிதி மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘சினிமா தயாரிப்புத் தொழில் நிமித்த மாக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது. நீதிமன்ற நிபந்தனையால் தகவல் தெரிவிப் பதில் சிர மம் உள்ளது. என் மீதான கிரானைட் முறைகேடு வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதால், நிபந்தனையைத் தளர்த்த வேண் டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், டிஎஸ்பியின் பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘மனுதாரர் நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறியுள்ளார். வெளிநாட்டில் சினிமா படப்பிடிப்பு நடத்தவும், பயண ஏற்பாடுகளும், விசா கோருவதும் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும். எனவே, முன்கூட்டியே முடிவு செய்யப்படும் பயண விவரத்தை 3 நாட்களுக்கு முன் நீதிமன்றத்துக்குத் தெரிவிப் பதில் சிரமம் இருக்காது.
தவிர, மனுதாரர் வெளிநாட்டில் எங்கு தங்கியிருக்கிறார் என்பது, கிரானைட் முறைகேடு விசாரணை அதிகாரிக்குத் தெரிய வேண்டும்.
இதனிடையே, துரை தயாநிதி தனது பாஸ்போர்ட்டில் முகவரி மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்துள்ளார். மதுரையில் வசிக்கும் அவர், பாஸ்போர்ட்டில் சென்னை முகவரியை மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளது தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வில்லை.
மனுதாரரின் நிபந்தனையை தளர்த்தினால், அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளன. மனுதாரரை அவசர விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்குவதிலும் சிரமம் ஏற்படும்.
இந்தியாவுடனான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள வெளிநாடுகளில் தங்கியிருந்தால் மட்டுமே மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஒப்பந்தத்தில் இல்லாத வெளிநாடுகளில் இருந்தால் நடவடிக்கை எடுப்பது சிரமம். இதன் மூலம் அவர் தப்பிச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, துரை தயாநிதியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, ‘மனுதாரரின் வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
கணிம முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தவுள்ளார். அப் போது, மனுதாரர் சம்பந்தப்பட்ட கிரானைட் முறைகேடு குறித்தும் விசாரிக்கப்படும். எனவே, மனுதாரரின் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்தக் கூடாது’ என்றார்.
பின்னர், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணையை ஒத்திவைக்க கோரப்பட்டது.
இதையேற்று, விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.