

சுய சிந்தனையுடன் சுதந்திரமாக செயல்படும் வகையில் அரசுப் பள்ளியில் மாணவர்கள் தாங்களாகவே கலைக் கூடத்தை உருவாக்கியுள்ளனர். இவ்விடத்தில் நுண்கலைகள், ஓவியம் கற்பது தொடங்கி கல்வியை இயல்பான சூழலில் கற்கவும் தொடங்கியுள்ளனர்.
தென்னை, பனை மரங்களிலிருந்து விழுந்து குப்பையில் சேரும் பொருட்களை கலைப் படைப்புகளாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர்கள் சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள். குறிப்பாக பாய்மரக் கப்பல், சைக்கிள், விலங்குகள், நகைகள் என செய்து வந்தனர். திருச்சி, சென்னை, புதுச்சேரி என பல நகரங்களுக்குச் சென்று இம்மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் கலை வகுப்புகளும் எடுக்கின்றனர்.
தற்போது 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பள்ளியின் ஒரு அறையை அலங்கரித்து கலைக் கூடமாக உருவாக் கியுள்ளனர். இக்கூடம் தற்போது திறக்கப்பட் டுள்ளது. இக்கூடத்தில் நடுவே மரமும் அதைச்சுற்றி வண்ணங்களால் வரைந்து கற்கும் சூழலை இனிமையாக்கும் படி செதுக்கியுள்ளனர். வீண் என ஒதுக்கப்பட்ட பொருட்களை கொண்டு இவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகளும் இக் கூடத்தில் இடம் பிடித்துள்ளன.
கலைக் கூடத்தில் ஓவியம் வரையும் மாணவ, மாணவிகள்.
இதுதொடர்பாக இப்பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி 'தி இந்து'விடம் கூறும்போது, “வகுப்பறையாக இல்லாமல் ஓவியம், நுண்கலை பயிலும் இடத்தை கலைக் கூடமாக மாணவ, மாணவிகளே உருவாக்கியுள்ளனர். இவ்விடம் இயற்கையோடு இணைந்த வகையில் பன்முகத் தன்மையோடு இருக்கிறது. இதனால் முழு மகிழ்வுடனும் தங்களின் பல திறன்களை முழுமையாக வெளிப்படுத்த இச்சூழல் வாய்ப்பை உருவாக்கும்” என்று குறிப்பிட்டார்.
6-ம் வகுப்பு மாணவர்கள் முதன் முதலாக நேற்று காலை கலைக் கூடத்தில் ஓவியத்தை வரையத் தொடங்கினர். கலைகளை வடிவமைக்க அதிக செலவு செய்ய வேண்டி யதில்லை. கற்பனைத்திறனும், கிராமத்திலேயே எளிதாக கிடைக்கும் பொருட்களே போதும் என்பதை மெய்ப்பிக்கின்றனர் இப்பள்ளி மாணவர்கள்.