

அம்பத்தூரில் சாலை ஓரங்களில் வசித்த நரிக்குறவ இன மக்களின் குழந்தைகள் 10 பேரை காவல் ஆய்வாளர் ஒருவர் பள்ளியில் சேர்த்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ் அருகே பைபாஸ் மேம்பால சாலையின் கீழ் உள்ள பிளாட்பாரத்தில் சுமார் 15 நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் அந்த வழியாக ரோந்து செல்லும் போது, நரிக்குறவ இன மக்களின் குழந்தைகள் சாலைகளின் ஓரங்களில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவர்களை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து அவர்களிடம் கேட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு தங்களின் குழந்தைகளில் 3 பேரை அருகிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்ததாகவும், ஆனால், போக்குவரத்து மற்றும் துணிமணிகள் போன்ற இதர செலவினங்கள் ஏற்பட்டதால், முடியாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் நரிக்குறவ இன பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, அருகே உள்ள ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம், நரிக்குறவர்களின் பெற்றோர்களைப் பற்றி எடுத்துக்கூறி, அவர்களது பிள்ளைகளை பள்ளியில் புதியதாக சேர்க்கவும், பாதியில் படிப்பை கைவிட்ட பிள்ளைகள், அவர்களது படிப்பை திரும்ப தொடர்வதற்கும் விஜயராகவன் ஏற்பாடு செய்தார். 7 குழந்தைகளை புதியதாகவும், பாதியில் படிப்பை கைவிட்ட 3 குழந்தைகளும் என மொத்தம் 10 பேரை பள்ளியில் சேர்த்துள்ளார். இதில் 6 பேர் பெண் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
10 பேரையும் பள்ளி வேலை நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், மாலையில் பள்ளி முடிந்தபிறகு, அவர்கள் தங்குமிடத்திற்கு அழைத்து வந்து விடவும் போக்குவரத்து வசதியை காவல் ஆய்வாளர் விஜயராகவன் செய்து கொடுத்துள்ளார். குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆடைகள், சோப்பு, எண்ணெய், பவுடர் போன்ற உதவிகளை போலீஸாரே செய்து கொடுத்துள்ளனர்.