

ஏலகிரி வனப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய வழக்கில், 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் அடுத்த ஏலகிரி மலைப் பகுதியின் நாகனூத்து காப்புக் காட்டுப் பகுதியில் வனத் துறையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காவல் துறைக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் 2 பேர் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தியது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் இருவரும் ஏலகிரி மலை நிலாவூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்(28), தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பி துரை(27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள், இரு வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள 7-வது பட்டாலியன் பிரிவில் காவலர்களாகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினர் இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட வேல்முருகன், தம்பிதுரை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, 7-வது பட்டாலியன் காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார்.