

‘‘வைகை அணையை நீங்கள் (அதிகாரிகள்) எங்க காலத்திலும், எந்த காலத்திலும் தூர்வார மாட்டீங்க’’ என்று விவசாயிகள் விரக்தி தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமை வகித்தார்.
எம். பழனிசாமி (கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலத் தலைவர்):
10 ஆண்டுகளாக வைகை அணையை தூர்வார வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால் தூர்வாரவில்லை.
உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன் (பெரியார், வைகை வடிநிலம்);
ரூ.182 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளோம். விவசாயிகளுக்கு சந்தேகம் இருந்தால் தலைமைப் பொறியாளரை சந்திக்கலாம்.
மாவட்ட வருவாய் அலுவலர்:
நீங்க வாங்கனு சும்மா சொல்லக் கூடாது. அந்த சந்திப்புக்கான நாளை முடிவு செய்துவிட்டு சொல்லுங்கள்.
விவசாயி வி. ராஜமாணிக்கம்;
பொதுப்பணித் துறை அதிகாரி கள்தான் விவசாயிகளின் நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய இருக்கிறது. ஆனால், கடந்த மூன்று கூட்டங்களிலும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பங்கேற்கவில்லை. அடுத்தமுறை அவர் வராவிட்டால் கூட்டத்தை புறக்கணிப்போம்.
உடனே மாவட்ட வருவாய் அலுவலர், ‘‘முதன்மை பொறி யாளரை அடுத்த கூட்டத்திற்கு கட்டாயம் வர சொல்லுங்கள்’’ எனக்கூறியதோடு அவருக்கு கடிதம் எழுத ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது விவசாயிகள் சிலர், ‘‘பொதுப்பணித்துறையினர் அவர்களது அலுவலகத்திற்கு அருகேயே வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியவில்லை. பிறகு எப்படி இவர்கள் வைகை அணையை தூர்வாருவார்கள். உங்களால் சாக்கடை கலப்பதை தடுக்க முடியவில்லையென்றால் சொல்லுங்கள், நாங்கள் தடுக்கிறோம், என்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள்:
எங்களால் சாக்கடை கலப்பதை கண்டுபிடித்து அதை தடுக்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் மட்டுமே கொடுக்க முடியும். தற்போது இரண்டு பஞ்சாயத்துகளுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் ’’ என்றனர்.
உசிலை தாலுகா 58 கிராம பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி பி.மணிகண்டன்;
1996-ம் ஆண்டில் இருந்து நடக்கும் 58 கிராம கால்வாய் பணிகள் 2017-ல் முடியும் என உறுதி அளித்தீர்கள். ஆனால், தற்போது மணல் தட்டுப்பாட்டால் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆட்சியர், வருவாய் அலுவலர் பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்த வேண்டும்.
விவசாயி கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘‘சாம்பிராணிபட்டி, கிடாரிப்பட்டி, வள்ளாளப்பட்டி, சித்தருவிப்பட்டி பகுதிகளில் காட்டெருமை, குரங்குகள் பப்பாளி, மாங்காய்கள், புடலங்காய்களை தின்றுவிட்டு சென்றுவிடுகின்றன. கடந்த வாரம் என்னை பாம்பு கடித்தது. இப்படி காட்டுமாடுகள், காட்டெருமைகள், பாம்புகளுக்கு மத்தியில் அச்சத்துடன் விவசாயம் செய்கிறோம். காட்டெருமைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
அதற்கு சோழவந்தான் ரேஞ்சர் ராஜேந்திரன், ‘‘காட்டெருமைகள் காடுகளில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றன. விளைபயிர்களை சேதப்படுத்தினால் நிவாரணம் கேளுங்கள், வழங்குகிறோம் என்றார். அதிருப்தி அடைந்த கோபாலகிருஷ்ணன், ‘‘உங்களிடம் நிவாரணம் பெற சான்றுகள் வாங்க அலைந்து கொண்டே இருக்க வேண்டுமா நாங்கள் விவசாயம் செய்ய வேண்டாமா? என்றார்.
தெர்மோகோல் மட்டுமே விட முடியும்
விவசாயி எம். பழனிசாமி பேசுகையில், மேட்டூர் அணையை தூர்வார விவசாயிகளே கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், திடீரென்று அறிவித்து உடனே தூர்வாரி விட்டார்கள். முதலமைச்சர் மாவட்டம் என்பதால் அது முடிந்ததா?. திட்டம் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்வது பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கான ஏற்பாடுதான், என்றார்.
அப்போது விவசாயிகள் சிலர் எழுந்து, ‘‘வைகை அணையில் தெர்மோகோல் மட்டுமே உங்களால் (அதிகாரிகள்) விட முடியும். நீங்கள் வைகை அணையை எங்க காலத்தில் மட்டுமில்லை, எந்த காலத்திலும் தூர்வார மாட்டீங்க’’ என்றனர்.
இதனால் கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க நெடு நேரமானது.