

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் லலிதா ஐஏஎஸ், தன் மகள் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சேர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையரான லலிதா ஐஏஎஸ் இதுகுறித்து நம்மிடம் விரிவாகவே பேசினார்.
''என்னுடைய குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைக்க எனக்கு விருப்பமில்லை. சென்னை மாநகராட்சிப் பள்ளியிலேயே அவள் படிக்கவேண்டும் என்று விரும்பினேன். அதனால் தருணிகாவை கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் தொடக்கப்பள்ளியில் திங்கட்கிழமை அன்று சேர்த்திருக்கிறேன். அவளும் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை ஆனந்தமாகத் தொடங்கி இருக்கிறாள்.
இந்த தருணத்தில் நானும் ஓர் அரசுப் பள்ளியின் வார்ப்பு என்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
தற்போது கற்பித்தலிலும், மற்ற குழு செயல்பாடுகளிலும் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் மாநகராட்சிப் பள்ளிகள் சிறந்து விளங்குகின்றன. இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை. ஆனால் எங்கள் குடும்பம் இதில் உறுதியாக இருந்தது.
விமானத்துறை வல்லுநரான என் கணவர் சுமந்த், எனக்கு முழு ஆதரவளிக்கிறார்'' என்றார்.
மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கு வெவ்வேறு விதமான சத்துணவுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவர்களின் உயர் கல்விச் செலவையும் மாநகராட்சியே ஏற்றுக்கொள்கிறது. பள்ளிகளில் விரைவில் 28 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக உள்ளன. ஏராளமான சாதனையாளர்களும், ஐஏஎஸ் அதிகாரிகளும் இங்கு உருவாகி இருக்கின்றனர்.
தருணிகாவுக்கு அளிக்கப்படும் உணவு குறித்து லலிதா கூறும்போது, ''இன்று அவளுக்காக பழங்களைக் கொடுத்தனுப்பினேன். ஆனால் அவள் விரைவிலேயே பள்ளிக்கு அளிக்கப்படும் உணவை உண்ணக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
பள்ளியில் முதல் நாள் குறித்து தருணிகாவிடம் கேட்டோம். அவர் சொன்னது, ''ஏபிசிடி கற்றுக்கொண்டேன். நிறைய நடனம் ஆடினேன்!''