

மணல் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (6-ம் தேதி) வேலைநிறுத்தப் போராட் டம், பேரணி நடத்த இருப்பதாக அனைத்து கட்டுமான அமைப்பு களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இந்திய கட்டுமானர்கள் சங்க கோவை மையத் தலைவர் கே.ராஜ வேலு, சிவில் இன்ஜினீயர்கள் சங்கத் தலைவர் கார்த்திக், கிரடாய் அமைப்பு தலைவர் ராஜேஷ் உட்பட 11 அமைப்புகளின் நிர்வாகிகள், கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆற்று மணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகள் தனியார்வசம் இருந்தபோது, தமிழகத்தில் தினமும் சுமார் 40 ஆயிரம் லோடு ஆற்று மணல் விநியோகிக்கப்பட்டது. ஆனால், அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும்போது, தினமும் 4 ஆயிரம் லோடு மணல் மட்டுமே கிடைக்கிறது.
தனியார் மூலமாக மணல் விற் பனை செய்தபோது லாபமடைந்த சில அதிகாரிகள், அரசு மூலமாக மணல் விநியோகம் செய்வதால், வேண்டுமென்றே மணல் தட்டுப் பாட்டை உருவாக்குகிறார்கள். இதனால், மணல் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.
முன்னர், ஒரு லோடு மணல் ரூ.10,500-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, மணல் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், கட்டுமானத் துறையில் உள்ள பிரச்சினைகளைக் களையக் கோரியும் நாளை (ஜூலை 6) தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்” என்று அவர்கள் கூறினர்.