Published : 22 Jul 2017 08:15 PM
Last Updated : 22 Jul 2017 08:15 PM

ரயில்வே துறையில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை தேவை: வாசன்

ரயில்வே துறையில் உள்ள குறைபாடுகளை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாட்டு மக்களுக்கான போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து அதிக பங்கு வகிக்கிறது. எனவே ரயில் போக்குவரத்தில் பயணிகளின் கட்டணத்தை அவ்வப்போது ஏற்றிக்கொண்டே போகக் கூடாது. காரணம் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மாநிலத்திற்கு உள்ளே அன்றாடப் போக்குவரத்துக்கு ரயில் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

மேலும் பிற மாநிலத்திற்கு செல்வதற்கும் ரயில் போக்குவரத்தையே பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் மத்திய அரசு ரயில் பயணிகளிடம் கட்டணத்தை அதிகம் வசூல் செய்கிறதே தவிர ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் தண்ணீர், சாப்பாடு வகைகள் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் சுத்தமாக, சுகாதாரமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் ரயிலில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் காலாவதியானதாகவும், தரமற்றதாகவும், ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட சாப்பாடு வகைகளை சூடேற்றி வழங்குவதாகவும் சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

சிஏஜி அணி மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து சுமார் 80 ரயில்களில் நடத்திய சோதனையில் 74 ரயில்களில் இது போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக, அறிக்கையின் ஆய்வில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு உணவுப்பொருட்களை ரயில் பயணிகளுக்கு வழங்கும் போது இதனை வாங்கி உண்ணும் பயணிகளின் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும். விற்கப்படும் உணவுப்பொருட்களின் விலையும் அதிகமாக இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், ரயிலில் உள்ள கழிவறைகள் ஆகியவை முறையாக தொடர்ந்து பராமரிக்கப்படாமல் அசுத்தமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரயில் நிலையங்களுக்கு வருபவர்களும், ரயிலில் பயணம் செய்பவர்களும் சுகாதாரச் சீர்கேட்டிற்கு உட்பட்டு பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு ரயில்வே துறையின் கீழ் உள்ள சில நிர்வாகத்தை நிர்வகிக்க தனியாரிடம் ஒப்படைத்திருக்கிறது. ஆனால் அந்த தனியார் நிறுவனம் முறையாக, சரியாக செயல்படுகிறதா என்பதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் உணவுப்பொருட்களின் தரத்தில் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதற்கும், ரயில்களில் சுத்தம், சுகாதாரத்தை பேணிக் காக்கவும் ரயில்வே நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மத்திய அரசு அதன் முக்கிய அமைச்சகமான ரயில்வே துறையில் உள்ள குறைபாடுகளை களைய உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

முக்கியமாக தற்போது வெளிவந்துள்ள சிஏஜி - அறிக்கையால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்திருக்கின்றனர். எனவே மத்திய ரயில்வே துறை உடனடியாக அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து ரயில்களிலும் சோதனைகள் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் இனி வரும் காலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலில் விற்கப்படும் அனைத்துவிதமான உணவுப்பொருட்கள் தரமானதாகவும், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத வகையிலும், சுத்தமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாவும் இருப்பதை தொடர் சோதனை மேற்கொண்ட பிறகே ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் நியாயமான விலையில் உணவுப்பொருட்கள் விற்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கான ரயில் போக்குவரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயணிகளின் பாதுகாப்பான, சுகாதாரமான போக்குவரத்திற்கு உறுதி செய்துகொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x