குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அமைச்சர், கேரள எம்எல்ஏ உட்பட சென்னையில் 234 பேர் வாக்களித்தனர்: விமானத்தில் வாக்குப்பெட்டி டெல்லி கொண்டு செல்லப்பட்டது

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்திய அமைச்சர், கேரள எம்எல்ஏ உட்பட சென்னையில் 234 பேர் வாக்களித்தனர்: விமானத்தில் வாக்குப்பெட்டி டெல்லி கொண்டு செல்லப்பட்டது
Updated on
2 min read

தமிழகத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் மொத்தம் உள்ள 233 எம்எல்ஏக்களில் திமுக தலைவர் கருணாநிதி தவிர மீத முள்ள 232 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், கேரள எம்எல்ஏ பறக்கல் அப்துல்லா ஆகியோரும் தங்கள் வாக்குகளை சென்னையில் பதிவு செய்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 17-ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் தலைவர் மீரா குமாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட் டனர். அவர்களும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று எம்.பி., எம்எல்ஏக்களிடம் வாக்கு சேகரித் தனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. நாடாளு மன்றம், மாநில சட்டப்பேரவைகள் என நாடு முழுவதும் 32 இடங்களில் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழக எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்காக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள குழுக்கள் கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தமிழகத்துக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக சட்டப்பேரவைச் செயலர் க.பூபதியும், இணை செயலர் சுப்பிரமணியும் நியமிக்கப்பட்டிருந்தனர். கடந்த 12-ம் தேதி இரவே டெல்லியில் இருந்து வாக்குப்பெட்டி கொண்டுவரப்பட்டது.

சட்டப்பேரவை வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்புடன் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டி உள்ளிட்ட பொருட் கள், நேற்று காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு நடக்கும் அறைக்கு எடுத்துவரப்பட்டது. பாஜக வேட் பாளரின் முகவர்களான மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செம்மலை மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் முகவர்களான அர. சக்கரபாணி (திமுக கொறடா), விஜயதரணி (காங்கிரஸ் கொறடா) ஆகியோர் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டது. அதன் உள்ளிருந்த மரப் பெட்டி வெளியில் எடுக்கப்பட்டு, அதில் இருந்த சீல் திறக்கப்பட்டு அனைவரிடமும் காட்டப்பட்டது. அதன்பின், மீண்டும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்களிக்க தேவையான ‘வயலெட்’ நிற மை கொண்ட பேனாக்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. 10.03 மணிக்கு முதல்வர் கே.பழனிசாமி முதல் நபராக வாக்களித்தார். அதன்பின் பேரவைத் தலைவர் பி.தனபால், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு அறைக்குள் நுழைந்ததும் வாக்குப்பதிவு அலு வலர்களில் முதலில் இருப்பவர் வாக்காளரின் பெயரை வாசித்தார். அடுத்தவர் வாக்குச்சீட்டை கிழித்துக் கொடுக்க, மூன்றாவது அலு வலர் அதை 4 ஆக மடித்து, வாக்களிக்கத் தேவையான பேனாவை வழங்கினார். வாக்காளர்கள் அங் கிருந்த மறைவான பகுதியில் வாக்களித்து, அதை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூபதி முன்பிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனர். பகல் 12 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த செம்மலை இறுதியாக வாக்களித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 234 எம்எல்ஏக்கள். ஜெயலலிதா மறைவால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. உடல்நலமின்றி வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவரும், திருவாரூர் எம்எல்ஏவுமான மு.கருணாநிதி வாக்களிக்க வரவில்லை. மற்ற 232 எம்எல்ஏக்களும் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.

இவர்கள் தவிர, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று சென்னையில் வாக்களித் தார். சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்த கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டி யாடி தொகுதி எம்எல்ஏ பறக்கல் அப்துல்லாவும் இங்கேயே வாக் களித்தார். இவர்களையும் சேர்த்து சென்னையில் மொத்தம் 234 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு முடிவு

பகல் 12 மணிக்கே வாக்குப்பதிவு முடிந்துவிட்டாலும் கருணாநிதி வாக்களிக்காத நிலையில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு அலுவலர்கள் அங்கேயே காத்தி ருக்கும் நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, ‘‘விதிகள்படி, 100 சதவீத வாக்குப்பதிவு முடிந்ததும், பெட்டியை சீலிட்டு தயார் நிலையில் வைத்துவிடலாம். ஆனால், ஒருவர் வாக்களிக்காததால், மாலை 5 மணி வரை காத்திருக்க வேண்டியுள்ளது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு, அப்பெட்டி மற்றொரு இரும்பு பெட்டியில் வைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், இரவு 9.10 மணிக்கு விமானத்தில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in