Published : 18 Jul 2017 08:33 AM
Last Updated : 18 Jul 2017 08:33 AM

நக்சல்களுடன் தொடர்புடைய மாணவி குண்டர் சட்டத்தில் கைது: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நோட்டீஸ் அளித்தவர்

சேலத்தில் அரசு மகளிர் கல்லூரி அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்த கல்லூரி மாணவி வளர்மதி மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 12-ம் தேதி சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே வளர்மதி(25) என்பவர் இயற்கை பாதுகாப்புக் குழு என்ற பெயரில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை மாணவிகள், பொதுமக்களிடம் விநியோகம் செய்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் ‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக ஜூலை 15-ம் தேதி புதுக்கோட்டையில் நெடுவாசல் மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை நிற்போம். மத்திய, மாநில அரசுகளே கதிராமங்கலத்தில் இருந்து காவல்துறையை வெளியேற்று, ஹைட்ரோகார்பன் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து வளர்மதியையும், அவருடன் இருந்த ஜெயந்தி(48) என்ற பெண்ணையும் சேலம் கன்னங்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். சேலம் வீராணத்தை அடுத்த வீமனூரைச் சேர்ந்தவரான வளர்மதி, பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்து வருபவர் என தெரியவந்தது. அவர் மீது, அரசுக்கு எதிராக கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வளர்மதி மீது சிதம்பரம், குளித்தலை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வளர்மதி சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் இருந்த ஜெயந்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே போலீஸார் நடத்திய விசாரணையில், வளர்மதிக்கு வீராணத்தைச் சேர்ந்த நக்சலைட் பழனிவேலு, சேலத்தில் மத்திய அமைச்சர் மீது காலணி வீசிய வழக்கில் கைதான சாலமன் உள்ளிட்டோருடன் போராட்டரீதியாக தொடர்பு இருப்பது தெரியவந்தது. பொதுநல மக்கள் எழுச்சி இயக்கம் என்ற அமைப்பில் அவர் உறுப்பினராகவும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

பல்வேறு வழக்குகள் இருப் பதால் வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் சேலம் பெண்கள் சிறையில் வைக்கப்படுவதில்லை என்பதால், கோவை மத்திய சிறைக்கு வளர்மதி கொண்டு செல்லப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைதான ஆணை வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x