

பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி எங்கெங்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை உரிய புகைப்படங்களுடன் சேர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 1,104 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த கோ.அகிலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
"சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடுத்து நிறுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தொடர்பாக தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். "40 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான அளவில் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டின் பிளாஸ்டிக் கழிவுகள் விதிமுறைகளை அமல்படுத்தும் விதத்தில் கடந்த 24.10.2013 அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட மாபெரும் நிகழ்ச்சியின் மூலம் அன்று ஒரே நாளில் மட்டும் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 35 டன் பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2011-12 மற்றும் 2012-13-ம் ஆண்டுகளில் ரூ.142 கோடியில் 1,104 கி.மீ. தூரத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று அந்த பதில் மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி எங்கெங்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை உரிய புகைப்படங்களுடன் சேர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.