ஸ்மார்ட் அட்டை குளறுபடிகளுக்கு அதிகாரிகளின் திட்டமிடாத போக்கே காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு

ஸ்மார்ட் அட்டை குளறுபடிகளுக்கு அதிகாரிகளின் திட்டமிடாத போக்கே காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு
Updated on
2 min read

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்குதான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைப் பொருட்களைப் பெறுவதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் அடுத்தடுத்து கேலிக்கூத்துகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சரியான திட்டமிடாமல் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால், தகவல் தொழில்நுட்பம் குறித்த புரிதலோ, கணினி அறிவோ இல்லாத அப்பாவி பாமர மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை 2010-ஆம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி அட்டைகளை ஒழிப்பதற்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டியிருப்பதாகக் கூறி அப்போது புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. அதன்பின்னர் 2014-ஆம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்து விட்டன. நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதத்திற்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.

மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 1.95 கோடி குடும்ப அட்டைகள் உள்ள நிலையில், இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது 52.30 விழுக்காடு மட்டுமே. சென்னையில் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் வேகம் இன்னும் கொடுமையாக உள்ளது. புறநகர் பகுதிகளில் 52 விழுக்காட்டுக்கும் கூடுதலாக ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 35% அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் 20 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஏழு லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது வெறும் தோல்வி அல்ல.... படுதோல்வி ஆகும்.

சென்னையில் ஸ்மார்ட் அட்டைகள் தாமதமாவதற்கு காரணம் குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் முறையாக இணைக்கப்படாததுதான் என்று அரசுத் தரப்பில் கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சென்னையில் ஸ்மார்ட் அட்டைகளை பெறுவதற்காக கடந்த ஆண்டு இறுதி வரை 80 விழுக்காட்டினர் ஆதார் எண்களை இணைத்துள்ளனர் என்பது தமிழக அரசே ஒப்புக்கொண்ட உண்மையாகும். அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் எந்த சிக்கலும் இருக்கப்போவதில்லை.

ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, வழங்கப்பட்ட பல ஸ்மார்ட் அட்டைகளில் குடும்பத்தலைவரின் படங்களுக்கு பதிலாக அஜித், விஜய், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்- நடிகைகளின் படங்கள் இடம்பெற்றிருப்பதாக ஊடகங்களிலேயே செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இன்னும் சில அட்டைகளில் மரங்கள், மண்மேடுகள் ஆகியவற்றின் படங்களைப் போட்டு, அவை தான் குடும்பத் தலைவர் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு மட்டுமல்ல, வெட்கப்பட வேண்டிய கேலிக்கூத்தும் கூட.

தயாரிக்கப்பட்ட பெரும்பாலான ஸ்மார்ட் அட்டைகளில் இத்தகைய குழப்பங்கள் இருந்ததால், அனைத்தையும் அழித்து விட்டு, புதிய விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதலில் அனைத்து அட்டைதாரர்களும், குடும்ப உறுப்பினர்கள் குறித்த விவரங்களுடன், புகைப்படமும் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது. அதன்படியே சென்னைவாசிகள் தங்களைப் பற்றிய விவரங்களை நியாய விலைக் கடைகளில் அளித்தனர். ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அனைத்து அட்டைதாரர்களை அழைத்த நியாய விலைக் கடை ஊழியர்கள், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை திரும்பக் கொடுத்து அவற்றை ஆன்லைனில் பதிவு செய்ய தங்களால் முடியவில்லை என்றும், அனைவரும் சொந்த முயற்சியில் பதிவு செய்து கொள்ளும்படியும் கூறி விட்டனர்.

ஆனால், ஸ்மார்ட் அட்டைக்கான இணையதளத்தில் 10 கே.பி அளவுக்கு மேல் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியாததால் பலரும் பொதுச்சேவை மையங்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுச்சேவை மையங்களில் ஸ்மார்ட் அட்டைகள் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு ரூ.30 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

படித்தவர்களுக்கே இந்தப் பணி சவாலாக இருக்கும் நிலையில் பாமர மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இதற்கான கட்டணம் அவர்களுக்கு பெருந்தொகை என்பது ஒருபுறமிருக்க இதற்காக அவர்கள் ஓரிரு நாட்களாவது பணிக்கு செல்லாமல் ஊதியத்தை இழக்க நேரிடுகிறது.

ஸ்மார்ட் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம் அதிகாரிகளின் திட்டமிடாத போக்கு தான். அவர்களின் தவறுக்காக அப்பாவி மக்களை அவதிக்குள்ளாக்குவதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in