இலங்கை அரசின் மசோதா தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்: முத்தரசன்

இலங்கை அரசின் மசோதா தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்: முத்தரசன்
Updated on
1 min read

இலங்கை அரசின் மசோதா தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்கிய பின்னர், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகியுள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுவதும், மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதும், வலைகளை அறுத்து சேதப்படுத்துவதும், மீன்கள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்வதும் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

தங்களது தொழிலுக்கும், உடமைக்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு மீனவர்கள் கொண்டு செல்கின்றனர்.தமிழக முதல்வர் யாராக இருப்பினும் மத்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு அவ்வப்பொழுது தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகின்றனர். ஆனால் இது வரையில் எவ்வித நிரந்தர தீர்வும் காணப்படவில்லை.

தற்போது இலங்கை அரசு இந்திய மீனவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ 50 ஆயிரம் (இலங்கை ரூபாய் மதிப்பில்) அபராதம் என மசோதா தாக்கல் செய்துள்ளது.

இலங்கை அரசின் இம்மசோதா முற்றிலும் இந்திய மீனவர்களுக்கு எதிரானது. தமிழக மீனவர்கள் தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழிலை கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடியதாகும். இது குறித்து மத்திய அரசு உடன்தலையிட்டு தடுத்து நிறுத்திட முன்வர வேண்டும். மாநில முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்தால் மட்டும் போதாது. நேரில் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்திட வேண்டும்.

இலங்கை அரசின் மசோதா தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் பேரபாயம் உள்ளதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in