குளச்சல் போர் வெற்றி தினம் - புதிய சர்ச்சைக்கு விடை கிடைக்குமா?
திருவிதாங்கூர் சமஸ் தானத்தை ஆண்ட மார்த்தாண்ட வர்மாவுக் கும், டச்சுப்படை யினருக்கும் கடந்த 1741-ம் ஆண்டு குளச்சல் கடற்கரை யில் போர் நடந்தது. இந்த போரில் மார்த்தாண்ட வர்மா வெற்றி பெற்றார். இந்த வெற்றியை நினைவு கூரும் வகையில், குளச்சலில் காணிக்கை மாதா ஆலயம் அருகே நினைவு ஸ்தூபி நிறுவப்பட்டு உள்ளது.
போரில் மரணமடைந்த வீரர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதி, நினைவு ஸ்தூபி முன் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இன்று 276-வது போர் வெற்றி நினைவு தினம் நடைபெறுகிறது.
கேரளாவில் இருந்து ராணுவ வீரர்களும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் மரியாதை செலுத்து கின்றனர். காலம், காலமாக இந்த அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் தற்போது புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
டச்சுப்படை வருகை
இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் என்.டி.தினகர் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
திருவிதாங்கூர் சமஸ் தானத்தை ஆண்ட மார்த் தாண்ட வர்மா தனது ராஜ்யத்தை விரிவுபடுத்த முனைந்தார். அப்போது நெடுமங்காடு, தேசிங்கு நாடு (கொல்லம்) ஆகியவை குறுநில மன்னர்களிடம் இருந்தது. இவர்களோடு டச்சு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. குறுநில மன்னர்களின் பரப்பில் மார்த்தாண்ட வர்மாவின் பிடி இறுகியது. அப்போது தங்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தவர்களைக் காக்க டச்சுப்படை முனைந்தது. குளச்சல் வழியாக மார்த்தாண்ட வர்மாவின் ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளை கைப்பற்ற வந்தது.
போர் பயிற்சி அளித்தனர்
கொச்சியில் இருந்து 1740 நவம்பர் 26-ல் குளச்சல் கடற் கரைக்கு வந்தனர். அங்கிருந்து 3 நாட்கள் குண்டு வீச்சிலும் ஈடுபட்டனர். பின்னர் 1741 பிப்ரவரி 19-ம் தேதி குளச்சல் கரையில் இறங்கி போர் புரிந்ததில், டச்சு வீரர்கள் 22 பேர் இறந்தனர். மார்ச் 21-ம் தேதி டச்சுப்படை தேங்காய்ப்பட்டிணத்தை தீக்கிரையாக்கியது.
டச்சுப்படையின் தளபதியாக யான் கிறிஸ்டியான் ரிஜிட்டல் என்பவர் இருந்துள்ளார். டச்சுப்படை குழுக்களிடையே ஏற்பட்ட பிரிவால், கன்னியாகுமரியில் முகாமிட்டிருந்த தளபதி கார்ல் ஆகஸ் தவ்வென்ஸ்கோட், டிலனாய் உள்ளிட்ட 22 பேர் திருவிதாங்கூர் மன்னரிடம் சேர்ந்து கொண்டனர். இவர்கள் திருவிதாங்கூர் படைக்கு போர் பயிற்சியும் கொடுத்துள்ளனர்.
சரண் அடைந்தனர்
ஆகஸ்ட் 2-ம் தேதி டச்சுப்படைக்கு தலைமை தாங்கிய யான் கிறிஸ்டியான் ரிஜிடல் குண்டடிபட்டு உயிரிழந்தார். ஆகஸ்ட் 9-ம் தேதி குளச்சலில் டச்சுக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த கோட்டையில் வெடி மருந்து கிடங்கு வெடித்தது.
ஆகஸ்ட் 12-ம் தேதி 190 வீரர்கள் திருவிதாங்கூர் அரசிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த போர் ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவுற்றதாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இது நெதர்லாந்து நாட்டின் ஆவண காப்பகத்திலும் உள்ளது. இதுகுறித்து நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மார்க் டிலனாய் எனும் வரலாற்று ஆய்வாளர் புத்தகம் எழுதியுள்ளார்.
தெளிவுபடுத்த வேண்டும்
கேரள வரலாற்று ஆய்வாளர்களில் வி.நாகனமயா, ஜூலை 31-ம் தேதி போர் முடிந்தது எனவும், டி.கே.வேலுப்பிள்ளை, சங்குனி மேனன் ஆகியோர் ஆகஸ்ட் மத்தியில் போர் முடிந்தது எனவும் இருவேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் உள்ளது” என்றார் அவர்.
