ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி கேஸ் டெலிவரிக்கு ரூ.60 கூடுதல் கட்டணம் வசூல்: பொதுமக்களிடம் கூடுதல் தொகை பெற்று பல கோடி மோசடி

ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி கேஸ் டெலிவரிக்கு ரூ.60 கூடுதல் கட்டணம் வசூல்: பொதுமக்களிடம் கூடுதல் தொகை பெற்று பல கோடி மோசடி
Updated on
2 min read

கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வோர் ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி தற்போது கூடுதலாக ரூ.50 முதல் ரூ.60 வரை கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

புதுச்சேரியில் கேஸ் இணைப்பு வைத்திருக்கும் மக்களுக்கு இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆயில் ஆகிய 3 பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

அவரவர் தங்களின் ஏஜென்சிகளில் பதிவு செய்தால், அங்கிருந்து விநியோகம் செய்யும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பதிவு செய்த சிலிண்டர்களை மினி வேன்களில் ஏற்றிச் சென்று வீடுகளில் விநியோகிக்கின்றனர்.

'சிலிண்டர் சப்ளை செய்யும் வீடுகளில் கூடுதல் தொகை வாங்கக்கூடாது' என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஏஜென்சிகளுக்கு இதற்கான கட்டணத்தை, எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் லாபத்தின் ஒரு பகுதியில் இருந்து தருகின்றன.

தற்போது ஜிஎஸ்டி அமலான பிறகு சிலிண்டர் விநியோகிப்பவர்கள் வாங்கும் தொகையும் அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த கோவிந்தன் கூறுகையில், "தற்போது ரூ. 542 சிலிண்டருக்கு கட்டணம் செலுத்துகிறோம். கேஸ் சிலிண்டர் வீட்டில் டெலிவரி செய்வோர் முன்பு 30 ரூபாய் வரை கூடுதலாக வாங்கி வந்தனர். ஜிஎஸ்டிக்கு பிறகு தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை வாங்குகிறார்கள். சிலிண்டர் ஜிஎஸ்டியுடன் டெலிவரி செய்வோரும் ஜிஎஸ்டியை காரணம் காட்டி கூடுதலாக வசூலிக்கின்றனர். இதில் தரைத்தளம், முதல்தளம், இரண்டாவது தளம் என தனித்தனியாக கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதும் நடக்கிறது. இதனால் ரூ. 600 வரை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டியுள்ளது. ஏஜென்சியில் புகார் செய்தும் பலனில்லை" என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து கேஸ் ஏஜென்சி வட்டாரங்களில் விசாரித்த போது ‘ஒரு சிலிண்டர் விநியோகிக்க அந்த நபருக்கு ரூ. 8 ஒதுக்கப்படுகிறது. பல ஏஜென்சிகள் சரியாக தந்தாலும் விநியோகம் செய்பவர்கள் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள். அதில் ஏஜென்சியில் பணியாற்றுவோருக்கும் தொடர்பு உள்ளது. தற்போது ரூ. 542 சிலிண்டர் விலை பில்லில் இருந்தால் கூடுதலாக ரூ. 56 தர வேண்டியுள்ளதாக பலரும் கூறுகிறார்கள்.

நாளொன்றுக்கு ஒரு ஏஜென்சி ஆயிரம் சிலிண்டர்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்தால், மோசடியாக பெறப்படும் இந்த கூடுதல் வருவாய் ஒரு நாளில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இதை மாதக்கணக்கில் கணக்கிட்டால் லட்சத்திலும், ஆண்டுக்கு கோடிக்கணக்கிலும் செல்லும். இது மிகப்பெரிய மோசடி" என்று குறிப்பிடுகின்றனர்.

புகார் செய்ய தனி இலவச எண்

ஆண்டுக்கு பலகோடி உபரியாக நடக்கும் இந்த மோசடியை தடுக்கவும், புகார் தரவும் தனி இலவச எண் உள்ளது. அனைத்து மொழியிலும் புகார் தரலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் இதற்கான தீர்வையும் குறிப்பிட்டனர். அவர்கள் 'தி இந்து'விடம் கூறியதாவது:

கேஸ் சிலிண்டர் வரும்போது அவர்கள் தரும் பில்லில் குறிப்பிட்டுள்ள கட்டணம் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணத்தை கேட்டால் 1800-2333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் அழைத்து இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளில் உங்களுக்கு உரிய மொழியை தேர்வு செய்து புகார் செய்யலாம். அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் பொதுவான எண் இது.

தொடக்கத்திலேயே உங்கள் கேஸ் இணைப்பு எந்த எண்ணெய் நிறுவனத்துக்குரியது என்பதையும் குறிப்பிட்டு விடலாம். புகார் செய்த பிறகு சரியான நேரத்தில் சிலிண்டர் விநியோகத்தை ஏஜென்சி தரப்பு செய்யாவிட்டாலும் புகார் தரலாம். உடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொதுவாக சிலிண்டருக்கான மானியத் தொகை நீங்கள் ஏஜென்சியில் இணைத்துள்ள வங்கிக் கணக்கில் சேர்ந்து விடும். அதையும் நீங்கள் இந்த எண்ணில் விசாரித்து கண்காணிக்கலாம். அதுதொடர்பான புகார்களையும், கேஸ் விநியோகம் தொடர்பான எப்புகாரையும் இந்த எண்ணில் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in