

கமல்ஹாசனுக்கு அரசியலைப் பற்றி தெரியாது. அவர் அரசியலுக்கு வந்து குற்றச்சாட்டுகளை சொன்னால் அதுகுறித்து பதிலளிப்போம் என்று முதல்வர் கே. பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் சென்று முதல்வர் கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
“எனக்குப் பின்னாலும் 100 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்” என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல அவரது லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகிறோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அறிவித்துள்ளோம். அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து அமைச்சர்கள் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அவர் நடித்து வருகிறார். அவருக்கு அரசியலைப் பற்றி தெரியாது. அரசியலுக்கு வந்து குற்றச்சாட்டுகளைக் கூறினால் உரிய பதில் தருவோம்.
குட்கா மற்றும் போதைப் பொருட்கள் மீது கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த புள்ளி விவரங்களை ஏற்கெனவே தெரிவித்துள்ளேன். இது தொடர்பாக வசூலிக்கப்பட்ட அபராதங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான வடிவமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வடிவமைப்பு மற்றும் டெண்டர் விடுவது போன்ற பணிகள் முடிந்தவுடன் நினைவிடம் எழுப்பப்படும். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்து.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘இணையும் என நம்புகிறோம்’ என்று முதல்வர் பதிலளித்தார்.