திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் அதிகரிப்பால் அழிந்துவரும் தென்னந்தோப்புகள்: இதுவரை 20 லட்சம் மரங்கள் காய்ந்தன
திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சி அதிகமானதால் தென்னந்தோப்புகள் அழிந்து வருகின்றன. மாவட்டத்தில் 52 லட்சம் தென்னை மரங்களில், 20 லட்சம் மரங்கள் காய்ந்து விட்டன.
திண்டுக்கல்லில் கன்னிவாடி, அய்யம்பாளையம், சித்தையன் கோட்டை, வத்தலகுண்டு, கொடைக்கானல் மலை அடிவாரம், நத்தம், பழநி என மொத்தம் 31 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னந்தோப்புகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால், சிறிதளவே மரங்கள் காய்ந்தன. விவசாயிகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வளர்த்த மரங் ளை லாரி தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், தென்னை மரங்கள் காயத் தொடங்கின. விவசாயிகள் சிரமப்பட்டு ஓரளவு மரங்களை காப்பாற்றினர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை உரிய நேரத்தில் பெய்திருந்தால் வறட்சியில் இருந்து தப்பி விடலாம் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தென்னை மரங்கள் படிப்படியாக அழியத் தொடங்கின.
மாவட்டத்தில் பல தென்னந் தோப்புகள் இன்று காய்ந்து நிற்கின்றன. விவசாயிகள் காய்ந்த மரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விற்கின்றனர். இதற்கிடையே வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை இணைந்து வறட்சி பாதிப்பு கணக் கெடுப்பை நடத்தியது. இதில் மாவட்டத்தில் மொத்தம் 30 ஆயிரம் ஹெக்டேரில் 52 லட்சம் தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. தற்போது 20 லட்சம் மரங்கள் வரை காய்ந்து விட்டது தெரியவந்துள்ளது.
மாவட்ட வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் மூலம் பாசனம் செய்ய வழிவகை செய்தோம். இதில் 50 சதவீதத்துக்கு மேல் சொட்டுநீர் பாசனமுறையை கையாண்டு வருகின்றனர். இவர்களால் மரங்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. மீதமுள்ளவர்களையும் சொட்டுநீர் பாசன முறைக்கு மாற்ற முயற்சி எடுத்து வந்தோம்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக தொடர் வறட்சியால் திறந்தவெளி கிணறுகள், ஆழ் துளைக் கிணறுகள் வறண்டன. இதனால் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு மரங்கள் காய்ந்து வருகின்றன. இதில் பெரும்பாலான மரங்களில் குருத்து ஒடிந்து தொங்குவதால் அவை மீண்டும் தழைக்க வாய்ப்பில்லை. மாவட்டத்தில் 40 சதவீத தென்னை மரங்கள் முற்றிலும் காய்ந்துவிட்டது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பருவமழை மேலும் தாமதமானால், பாதிப்பு அதிகரிக்கும் என்றார்.
திண்டுக்கல் அருகே நல்ல மன்னார்கோட்டையில் செங்கல் சூளைக்காக வெட்டி கொண்டு வரப்பட்ட தென்னை மரத் துண்டுகள்.
மேலும் 5 லட்சம் மரங்கள் கருக வாய்ப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது 20 லட்சம் தென்னை மரங்கள் காய்ந்து விட்ட நிலையில், அவ்வப்போது மழை பெய்தாலும், அவை மீண்டும் துளிர்க்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கிடையே மேலும் 5 லட்சம் தென்னை மரங்கள், இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்த மாத இறுதிக்குள்ளாவது கணிசமான அளவு மழை பெய்தால் மட்டுமே இந்த மரங்களை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சொட்டுநீர் பாசனத்தால் தாக்குப்பிடித்து வரும் இந்த மரங்கள், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் வற்றினால் நீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு காய்ந்து போகும் அபாயம் உள்ளது.
