‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்டதன் பொன் விழா; தமிழக உரிமைகளை காக்க உறுதியேற்போம்: வைகோ, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்டதன் பொன் விழா; தமிழக உரிமைகளை காக்க உறுதியேற்போம்: வைகோ, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
Updated on
1 min read

தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதன் 50-வது ஆண்டு விழாவில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க உறுதியேற்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

வைகோ: சென்னை மாகாணம் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றக்கோரி தியாகி சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27-ம் தேதி விருதுநகரில் உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கினார். அண்ணா, மபொசி, கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன் போன்றவர்கள் சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். 76 நாட்கள் கடந்த நிலையில் 1956 அக்டோபர் 13-ல் சங்கரலிங்கனார் உயிர் துறந்தார்.

அண்ணா முதல்வரானதும் சங்கரலிங்கனாரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 1967 ஜூலை 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1968 நவம்பர் 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு என பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாளையுடன் (ஜூலை 18) 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, வாழ்வுரிமை, பொருளாதார இறையாண்மை அனைத்தையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பையும், தனித்தன்மையையும் பாதுகாக்கும் வகையில் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், அவற்றை தட்டிப் பறிக்க நினைக்கும் டெல்லி ஆதிக்க அரசுக்கு அடிபணியாமல் தமிழர்கள் ஓரணியில் நின்று வாகைசூட இந்நாளில் உறுதியேற்போம்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்: சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என மாற்றுவதற்கு 1967 ஜூலை 18-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்டும் விழா 1968 டிசம்பர் 1-ம் தேதி சென்னை பாலர் அரங்கத்தில் நடைபெற்றது. உடல் நலிவுற்றிருந்த நிலையிலும் அன்றைய முதல்வர் அண்ணா அதில் உரையாற்றினார்.

தமிழ்நாடு என பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதன் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்நாளில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசை எதிர்ப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in