ஸ்ரீரங்கம் தொகுதி காலியிடம் பற்றிய அறிவிக்கை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு

ஸ்ரீரங்கம் தொகுதி காலியிடம் பற்றிய அறிவிக்கை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்பு
Updated on
1 min read

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிஉறுப் பினர் பதவி காலியாக இருப்பது தொடர்பான அறிவிக்கையினை சட்டப் பேரவைச் செயலகம் அடுத்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இழந்தார். இதனால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டது. எனினும், தீர்ப்பு வெளியாகி பல நாட்களாகியும் அது பற்றிய அறிவிக்கையை தமிழக சட்டப்பேரவைச் செயலகம் வெளியிடவில்லை.

இதற்கிடையே, சட்டப் பேரவைச் செயலகத்தினரோ, “தகுதி நீக்கம் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தால் அதனால் ஏற்படும் காலியிடத்தை நிரப்பு வதற்கு சில நடைமுறைகள் உள்ளன. கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு நகல், பேரவைத் தலைவருக்கு நேரடியாக அனுப்பினால்தான் பரிசீலிக்கப்படும்,” என்று கூறிவந்தனர்.

இது குறித்து சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள்,

‘தி இந்து’ விடம் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தீர்ப்பின் நகல் எங்களுக்குக் கிடைத்தது. அதனை பேரவைத் தலைவர் தனபால் ஆய்வு செய்துவருகிறார். 1,300 பக்கங்களுக்கு மேல் இருப்பதால் அதை படிக்க சில நாட்களாவது ஆகும். எனினும் அடுத்த வாரத்தில், ரங்கம் தொகுதி காலியிடம் பற்றிய அறிவிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளது,” என்றனர்.

அந்த அறிவிக்கை அடுத்த வாரம் வெளியானதும், தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தேர்தல் துறையினர் தகவல் தெரிவிப்பார்கள். அதன்பிறகு, இடைத்தேர்தல் தேதி பற்றிய முடிவினை தேர்தல் ஆணையம் எடுக்கும். அநேகமாக, இறுதித்தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக, பிப்ரவரி அல்லது மார்ச் முதல் வாரத்துக்குள் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்று தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஜெயலலிதா பதவி யிழந்ததால், ஸ்ரீரங்கம் தொகுதியில் பேரவை உறுப்பினர் பதவி காலியாக இருப்பதைப் பற்றிய அறிவிக்கையை சட்டப்பேரவைச் செயலகம் வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தமிழக தலைமைச் செயலாளர், சட்டப்பேரவைத் தலைவர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு கோரிக்கை மனுவினை நேற்று அனுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in