Published : 06 Jul 2017 06:40 PM
Last Updated : 06 Jul 2017 06:40 PM

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கின் நிலை என்ன?- முதல்வர் பழனிசாமி விளக்கம்

திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

''நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக விஷ்ணுபிரியா (வயது 27) என்பவர் கடந்த 02.02.2015 முதல் பணிபுரிந்து வந்தார். இவர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (தொகுதி - 1) மூலம் பணியில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி முடித்து இந்த உட்கோட்டத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார். கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். கோகுல்ராஜ் (ஆதிதிராவிடர்) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விஷ்ணுபிரியா புலன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

18.09.2015 அன்று காலை முதல் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு வந்த விஷ்ணுபிரியா திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு ஒரு காவலருக்கும் ஒரு ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையை சுமுகமாக முடித்து வைத்துவிட்டு, தனது முகாம் அலுவலகத்திற்கு சென்றவர், தனது வாகன ஓட்டுநர் காவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் சாப்பிட்டு விட்டு காத்திருங்கள் தொலைபேசியில் அழைக்கிறேன் என்று கூறி வீட்டிற்குள் சென்றுள்ளார்.

பின்னர் மாலை 5 மணிக்கு, துணை கண்காணிப்பாளரின் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், ஓட்டுநர் அவரது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி அழைத்துள்ளார். அப்பொழுது உள்ளேயிருந்து எவ்வித பதிலும் வராததால், ஜன்னல் வழியாக பார்க்க, துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா உள்ளே அவ்வறையின் கான்கிரீட் கூரையில் பொருத்தப்பட்டிருந்த கொக்கி ஒன்றில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததைக் கண்டுள்ளார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு நகர காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர், திருச்செங்கோடு கோட்டாட்சியருடன் அங்கு விரைந்து சென்று, கோட்டாட்சியர் முன்னிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்க, துணை கண்காணிப்பாளர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். பின்னர், வருவாய் மற்றும் காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் சடலத்தை கீழே இறக்கி இரவு சுமார் 8.30 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் காவலர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் வழக்கு (கு.எண்.431/15 ச/பி 174 குவிமுச) பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்கில் ராசிபுரம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் புலன் விசாரணை மேற்கொண்டார்.

காவல்துறையினர் விசாரணையில், இறந்து போன காவல் துணைக் கண்காணிப்பாளரின் வீட்டிலுள்ள மேசையின் மீது எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதத்தைக் கைப்பற்றினர். அதில் அவர் இது தன்னுடைய மூன்றாவது தற்கொலை முயற்சி எனவும், இம்முயற்சியில் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுள்ளது எனவும், தன்னுடைய தற்கொலைக்கு யாரும் பொறுப்பில்லை என்றும், தான் இத்துறைக்கு தகுதியில்லாதவர் எனவும், தனது உடலை எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாங்கிக் கொள்ள வேண்டுமெனவும், தன்னுடைய அம்மாவை யாரும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தன்னுடைய அம்மாவிற்கு வருத்தத்தை தெரிவித்தும், தன்னுடைய முடிவிற்கு மன்னிப்பு கோருவதாகவும், காவல்துறையினருக்கு சிரமம் கொடுக்க வேண்டாம் எனவும், தன்னுடைய தற்கொலை அவரது தனிப்பட்ட முடிவு எனவும், இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை எனவும், எந்த அரசியல் கட்சியினரிடமும் போக வேண்டாம் எனவும், இது தொடர்பாக மீடியாவிற்கோ, அரசாங்கத்திற்கோ செல்ல வேண்டாம் எனவும், யாரேனும் தூண்டி விட்டால் அவர்களை விட்டு விலகிச் செல்லுமாறும் நஷ்டஈடு எதுவும் கேட்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்திரிக்கையாளர்களுக்கு என்று குறிப்பிட்டு, அதில் இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு எனவும், இது சம்பந்தமாக வேறு கதைகளை எழுத வேண்டாம் எனவும், தான் ஒரு முக்கிய வழக்கின் விசாரணை அதிகாரி என்பதால், அதற்கும் இதற்கும் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும், தன்னுடைய குடும்பத்தினரை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

விஷ்ணுபிரியாவின் சடலத்தின் மீது பிரேத புலன் விசாரணை நடத்தப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழு ஒன்று காணொளி பதிவுடன் அவரது சடலத்தின் மீது பிரேத பரிசோதனை நடத்தி, சடலம் அன்றைய தினம் மாலை அவரது உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கில் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய ஏதுவாக, இவ்வழக்கு மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இவ்வழக்குடன் விஷ்ணுபிரியா புலன் விசாரணை செய்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கும் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இரு வழக்குகளிலும் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது பல்வேறு சாட்சிகளை விசாரித்தும், விஷ்ணுபிரியா பயன்படுத்தி வந்த கைபேசி, மடிகணினி, கைகணினி மற்றும் சில மின்னனு சாதனங்களையும் கைப்பற்றி தடய அறிவியல் துறை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், விஷ்ணுபிரியா விட்டுச் சென்ற தற்கொலை கடிதம் தடய அறிவியல் துறை ஆவண சோதனைக்கு அனுப்பப்பட்டு, பரிசோதனையின் முடிவில், அப்பிரிவினர் விஷ்ணுபிரியாவின் தற்கொலை கடிதம் அவரது அசல் கையெழுத்தை ஒத்துள்ளது எனவும், அக்கடிதத்தில் எந்தவிதமான சேர்த்தலோ, நீக்கலோ இல்லையெனவும் அபிப்பிராயம் தெரிவித்தனர்.

இந்நிலையில், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரி டிராபிக் ராமசாமி, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, வழக்கறிஞர் மாளவியா ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் உட்பட ஐந்து மனுக்கள் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அம்மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, இவ்வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை கோரி இருநபர் அமர்வில் மனு தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் 01.07.2016 அன்று விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையினர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவானது 24.10.2016 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இவ்வழக்கு 12.11.2016 அன்று மத்திய புலனாய்வுத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அத்துறையினர் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x