மின்வாரியம், 8 அரசு போக்குவரத்து கழகங்களால் கடந்த ஓராண்டில் ரூ.15,684 கோடி வருவாய் இழப்பு: இந்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவர் தேவிகா நாயர் தகவல்

மின்வாரியம், 8 அரசு போக்குவரத்து கழகங்களால் கடந்த ஓராண்டில் ரூ.15,684 கோடி வருவாய் இழப்பு: இந்திய கணக்கு தணிக்கைத் துறை தலைவர் தேவிகா நாயர் தகவல்
Updated on
2 min read

தமிழக பொதுத்துறை நிறுவனங்களால் கடந்தாண்டு வரை ரூ.80 ஆயிரத்து 925 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள தாக இந்திய கணக்கு தணிக்கைத் துறை அதிகாரி தேவிகா நாயர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் நேற்று இந்திய கணக்காய்வு மற்றம் தணிக் கைத் துறை தலைவரின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர் பாக நேற்று இந்திய கணக்கு தணிக் கைத்துறை அதிகாரி தேவிகா நாயர், தணிக்கை அதிகாரி திருப்பதி வெங்கட சாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேவிகா நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக பொதுத்துறை நிறுவனங் களால் கடந்தாண்டு வரை ரூ.80 ஆயிரத்து 925 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் 8 அரசு போக்குவரத்துக் கழகங்களால் ரூ.15 ஆயிரத்து 684 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ரூ.12 ஆயிரத்து 756 கோடியும், 8 அரசு போக்குவரத்துக்கழகங்களால் ரூ.2 ஆயிரத்து 600 கோடியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சாலைப் பணிக்கான மதிப்பீட்டு அறி வுரையை மாநில அரசு பின்பற்றாததால், மத்திய அரசின் முனையத்தை பயன் படுத்த முடியவில்லை. இதனால், பொது மக்களுக்கு சிறந்த சாலை வசதி ஏற் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தோட்டக் கலைத் துறைக்கு தமிழக அரசு காலம் தாழ்த்தி நிதி வழங்கி யுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் திறந்த வெளியில் சத்துணவு வழங்கப் படுகிறது.

சென்னை பெருநகர மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனம் ரூ.9 ஆயிரத்து 500 கோடி கேட்டதில், தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 500 கோடியை மட்டுமே ஒதுக்கியது.

கடந்த 2014-15ம் நிதியாண்டில், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு வழங்க வேண்டிய ரூ.32 கோடியே 15 லட்சம் நிதியில் இருந்து ரூ.20 கோடியே 17 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், 10 லட்சம் பேருக்கு 15 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த 2014ல் 11.02 சதவீதமாக இருந்த உற்பத்தி அளவு, 2015-ல் 10.64 சதவீதமாக குறைந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

* தொழில்துறையால் வெளியிடப் பட்ட அரசு ஆணையை வணிக வரித் துறை செயல்படுத்தாதால் ரூ.ஆயி ரத்து 637 கோடியே 61 லட்சம் வசூலிக்கப்படவில்லை.

* தனியார் வாகனங்களுக்கு தவறான அனுமதி வழங்கியதால் ரூ.6 கோடியே 59 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது.

* உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4 கோடியே 30 லட்சம் உரிமைக் கட்ட ணம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

* வழித்தட அனுமதி நிபந்தனை களை அரசு பேருந்துகள் மீறியதால் ரூ.187 கோடியே 97லட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

* கடந்த 2008-ல் தொடங்கப்பட்ட மின்னணு மாவட்ட திட்டத்தை பிப்ரவரி 2016-ல் முடிக்க திட்டமிட்டிருந்தாலும், இதுவரை முடிக்கப்படவில்லை.

* ஒரே கல்வியாண்டில் ஒரே மாண வருக்கான பல விண்ணப்பங்களை அனுமதித்ததால் ரூ. 3 கோடியே 23லட் சம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* ஒரே விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

* வழக்கொழிந்த பாடநூல்களை அப்புறப்படுத்த தாமதமானதால், கிடங்கு வாடகையாக ரூ. 13 கோடியே 37 லட்சம் (2012 முதல் 2016 வரை) தவிர்க் ககூடிய செலவினம் ஏற்பட்டுள்ளது.

* நீதிமன்ற கட்டிடங்கள், குடியிருப்பு கள் கட்ட உரிய காலத்தில் மத்திய அரசுக்கு பயனீட்டு சான்று அனுப்பாத தால் மத்திய அரசால் மானியம் விடுவிக்கப்படவில்லை.

* சென்னை பல்கலைக்கழகத்தில் நானோ அறிவியல் மையம் அமைக்க திட்ட அனுமதி பெறாமல் கட்டுமான பணியை ஒப்பந்ததாரருக்கு வழங்கியதால் ரூ. 2 கோடியே 87 லட்சம் கூடுதல் செலவும், ரூ. 86 லட்சத்து 66 ஆயிரம் கூடுதலாக செலுத்தும் நிலையும் ஏற்பட்டது.

* சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் நில அமைப்பியல், வானிலையியல் மற்றும் நீரியல் ஆய்வுகள் நடத்தப் படாமல் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன

* சென்னை மாநகராட்சியில் சாலைப் பணிகளில் மழைநீர் வடிகால்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் புள்ளிகள் கோராமல் புதிய சாலை பணிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீர் வாரியம் பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்து வதில் தாமதம்.

* மதுரை மாநகராட்சியில் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறாமல் இறைச்சிக்கூடம் இயங்கி வருகிறது.

* மதுரை மாநகராட்சியில் ஆட்டோ மற்றும் டாக்சி நிறுத்துமிடம் கட்டுவதில் பயனற்ற முதலீடு செய்யப்பட்டுள்ளது.

* சேலம் நகராட்சியில் வரி குறை வாக மதிப்பிட்டமையால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட விவரங்கள் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in